நீட் விலக்கு மசோதா.. குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்.. அந்த வார்த்தையை கவனிங்க!

சென்னை:

விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் விரத்தியடைந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (19)நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தந்தையும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நீட் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதற்கு மத்திய அரசும், ஆளுநர் ஆர்.என். ரவியுமே காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்தான், முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு இன்று ஒரு அவசரக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்கள் மருத்துப் படிப்பில் சேர்வதை பாதிக்கும்.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாது, மனித உயிரிழப்புகளுக்கு காரணமாகவும் நீட் அமைகிறது. எனவே, குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.