குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குநரான கார்த்திகேயன் வேலப்பன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் துல்கர் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் அதில் உள்ள ஆர்வம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

“எனக்கு 9 வயது இருக்கும்போது எனது அக்காவுக்கு 11 வயது. எங்கள் வீட்டில் ஒரு (மாருதி) 800 கார் இருந்தது. அதனை ஓட்டுவதற்கு டிரைவர் ஒருவரும் இருந்தார். அவரிடம் எங்களுக்கு தயவு செய்து கார் ஓட்டக் கற்றுக்கொடுங்கள் என்று கெஞ்சுவோம். பிறகு நான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டதும், காரை ரிவர்ஸ் எடுப்பது, வீட்டிற்கு அருகே நிற்க வைப்பது என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காரை ஓட்டுவேன்.
ஆனால் அப்போது கார் ஓட்டுவது என் அப்பாவிற்கு தெரியாது. இருப்பினும் ஒரு நாள் நான் அவருக்குத் தெரியாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை கூலாகதான் இருந்தார். கார் ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று அனுபங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

பல நிகழ்ச்சிகளில் கார் மீதான தனது ஆர்வம் குறித்து துல்கர் பேசியிருக்கிறார். தோனியைப் போல நிறைய கார்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். நேர்காணல் ஒன்றில் அவர் வைத்திருக்கும் கார்களின் எண்ணிக்கை குறித்து கேட்டப்போது, “ இது என்னை சிக்கலில் சிக்க வைக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.