
இருபது வருடங்களுக்குப் பிறகு வரும் 'இதயத்தைத் திருடாதே' நடிகை
மணிரத்னம் ரசிகர்களுக்கும், 80, 90களின் இளம் சினிமா ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு நடிகை கிரிஜா. 1989ம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் 'இதயத்தைத் திருடாதே' படத்தின் கதாநாயகி. அப்படி ஒரு துள்ளலான, இளமையான கதாநாயகியை அதற்கு முன்பு பார்த்திருப்போமோ என்று ரசிகர்களை ஏங்க வைத்தவர். இத்தனைக்கும் தெலுங்கில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் 'இதயத்தைத் திருடாதே'. ஆனாலும், ஒரு நேரடி தமிழ்ப் படத்திற்குக் கொடுத்த வெற்றியைத் தமிழ்ப்பட ரசிகர்கள் அந்தக் காலத்தில் கொடுத்தார்கள்.
அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கிரிஜா, பின்னர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 2002ல் வெளியான 'ஹிருதயாஞ்சலி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். 2003ல் 'துஜே மேரி கசம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதற்குப் பிறகு கடந்த 20 வருடங்களாக சினிமா பக்கமே வரவில்லை.
அவரைத் தற்போது 'இப்பனி டப்பிடா இலியாலி' என்ற கன்னடப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார் இயக்குனர் சந்திரஜித் பெலியப்பா. மதுமிதா என்ற 'சிங்கிள் மதர்' கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடிக்கிறாராம் கிரிஜா. தமிழில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த ரீ-என்ட்ரியிலாவது தமிழில் நடிப்பாரா ?.