உமா ஓயா, டயரபா நீர்த்தேக்கத்தின் பலன்கள் விரைவில் மக்களுக்கு – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் 

உமா ஓயா பல்நோக்கு வேலைத்திடத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் தேசிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் கிடைக்கும் என்பதோடு, பெரும்போகத்தின் போது 15,000 ஏக்கர் நிலத்தில் நெல் விளைச்சலை மேற்கொள்ள முடியும் எனவும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு நீர்ப்பாசன அமைச்சு பெருமளவான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு நீர்ப்பாசன அமைச்சு, விளைச்சல் நிலம் மற்றும் நீர் பராமரிப்பினூடாக பெருமளவான பங்களிப்பை வழங்குகிறது.

வரவிருக்கும் வறட்சியான காலநிலையை முகாமைத்துவம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் பேச்சுவார்ததைகள் இடம்பெறுகின்றன. நீர்ப்பாசன அமைச்சின் கீழுள்ள 07 நிறுவனங்களும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.

வரவு செலவு திட்டத்தில் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காலநிலையின் பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்காக அவற்றை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ திட்டமிடல், குளங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் உட்பட ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று 3000 நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் விவசாய அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான நிலங்களை இனங்கண்டு, அவற்றுக்கு அவசியமான நீர் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அந்த வேலைத்திட்டங்களை 25 மாவட்டங்களிலும் ஆரம்பித்துள்ளதோடு, உமா ஓயா திட்டத்தின் கீழ் 120 மெகா வோர்ட் மின்சாரத்தை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்குள் இணைக்கும் வகையில் டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணிகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இன்னும் இரு மாதங்களில் 120 மேகாவோர்ட் மின் உற்பத்தியை மேற்கொண்டு 15000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை மீண்டும் உணவு பாதுகாப்பு செயன்முறையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளன. ஒக்டோபர் மாதமளவில் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால், முன்னெடுக்க வேண்டிய திட்டமிடல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் உணவு பாதுகாப்பு செயற்பாட்டிற்காக ஜனாதிபதியின் தலைமையில் நீர்பாசன அமைச்சு, விவசாய அமைச்சு, , காலநிலை அவதான நிலையம் ஆகியன இணைந்து மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தேசிய குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் விவசாய தேவை மற்றும் உணவுப் பாதுகாப்பு, விளைச்சலுக்கான நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீர்ப்பாசன அமைச்சு பெருமளவான பங்களிப்பை வழங்கி வருகிறது.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.