மலேசியாவில் தனது மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 702 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலுள்ள மூவார் குடியிருப்பில் வசித்து வந்த 58 வயது நபர், தன்னுடைய 15 மற்றும் 12 வயது மகள்களை, 2018 முதல் 2023 (ஜூலை) வரை சுமார் 30 முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் ஒரு சிறுமி கர்ப்பமானதில், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதையடுத்து, மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தந்தை கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதில், குற்றம்சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், இந்தக் குற்றத்துக்கு குறைவான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி, “அவருக்கு வழங்கவிருக்கும் தண்டனை, குற்றவாளி தனது செயல்களைப் பற்றி சிந்திக்கவும், அவர் செய்த மோசமான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்க வேண்டும். குற்றவாளியின் செயல் இரண்டு சிறுமிகளுக்கு வாழ்நாள் வேதனையாக இருக்கும். எனவே, குற்றவாளிக்கு 234 பிரம்படிகளும், 702 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு தண்டனைகளையும், ஒரே நேரத்தில் அந்த நபர் அனுபவிக்க வேண்டும்” என்றார்.

சிறுவர்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மலேசிய சட்ட அமைப்பில் நீண்ட சிறைத் தண்டனை வழங்குவது, வழக்கமானதுதான். இதற்கு முன்னர், ஜோகூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 218 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.