தமிழகத்தில் உள்ள கோயில் இனாம் நிலங்களை மதிப்பில்லாத நிலங்களாக (ஜீரோ வேல்யூ) இந்து சமய அறநிலையத் துறை மாற்றுவதாகக் கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள்-வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையும், வஃக்பு வாரியமும் சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் – 1963-இன்கீழ், பட்டா பெற்ற விவசாயிகள், பட்டா பெற வாய்ப்பு கிடைக்காதவர்கள் மற்றும் நில உரிமையாளர்களின் நில உரிமையை பறிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அந்த நிலங்களை மதிப்பில்லாத நிலங்களாக (ஜீரோ வேல்யூ) ஆக்கவும், பட்டாக்களில் பெயர் மாற்றம் செய்தும், அந்த நிலத்தை பல ஆண்டுகளாக பராமரித்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளை அபகரிப்பாளர்கள் என்று கூறி சட்டவிரோதமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்து வருகிறது. நில உரிமை பெற்ற விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைப்பாணை அனுப்பியதுடன், உரிமையியல் சட்டப்படி, அதற்கான ஆவணங்களையும், கால அவகாசத்தையும் கொடுக்காமலும், சாட்சியங்களை தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்காலும் திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர் சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறார்.

இதனால், பல்லாண்டு காலமாக கோயில் இனாம் நிலங்களில் விவசாயம் செய்து வந்தவர்கள், குடியிருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கோயில் இனாம் நிலங்களில் விவசாயம் மற்றும் குடியிருப்போரின் நிலைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரால் நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளையும் ரத்து செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்து சமய அறநிலைய நிலம் தொடர்பான வழக்குகளை அந்த துறை அதிகாரிகளே விசாரிக்காமல், தனியாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதைக் கண்டு கொள்ளாவிடில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.