தருமபுரி: காவிரியில் மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகமே ஒன்று திரண்டு போராடும் என தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பேசினார்.
ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 16-ம் தேதி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிரச்சார நடைபயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் பல்வேறு பகுதிகளைக் கடந்து நேற்று (ஆகஸ்ட் 18) மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பின்னர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார் தலைமை வகித்தார்.
நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது: காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும், ‘நமது காவிரி நமது உரிமை’ என்ற தலைப்பிலான பிரச்சார நடை பயணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். நடைபயணத்தின் வழிநெடுக மக்களின் பேராதரவைக் காண முடிந்தது. தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான காவிரி 40-க்கும் மேற்பட்ட பெரு நகரங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளன. அதேபோல, தமிழகத்தின் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் காவிரியால் தான் சாகுபடி நடக்கின்றன.
டெல்டாவின் பெரும்பகுதி காவிரியால் தான் பாசன வசதி பெறுகிறது. காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை 50 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திப் பெற்றோம். அதன்பிறகும்கூட கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமிழகத்துக்கான தண்ணீரை வழங்க மறுக்கின்றனர். காவிரியாறு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சொந்தமானது.
கனமழை காலங்களில் மட்டும் தேக்கிவைக்க வழியின்றி உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா இதர காலங்களில் உரிய பங்கீட்டு நீரை வழங்க மறுக்கிறது. காவிரி நடுவர் மன்றம் ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டபோது கர்நாடகா உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. விசாரணை முடிவில், 174 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நீரை வழங்குவதற்கான வழிமுறைகளும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு பிறகும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவோம் என கர்நாடகா ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். மீண்டும் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தற்போது காவிரியில் தண்ணீரை திறந்து வருகிறது. இதை அங்குள்ள பாஜக தலைவர்கள் எதிர்க்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என்கிறார். இரட்டை வேஷம் போடும் பாஜக தமிழக மக்களுக்கு எதிரான கட்சி.
மேகேதாட்டு பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயன்றால் தமிழகமே ஒன்று திரண்டு போராடும். ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றினால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவோம். தரமான மருத்துவர்கள் உருவாக நீட் தேர்வு அவசியம் என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். நீட் இல்லாத காலத்தில் படித்து மருத்துவரான தமிழிசை தரமில்லாத மருத்துவர் என்று கூறிவிட முடியுமா?” இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம் எல் ஏ டில்லிபாபு, நிர்வாகிகள் இளம்பரிதி, கிரைஸா மேரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.