சாதிக்காய் மரங்களில் ஏற்பட்டுள்ள இலை உதிரும் பூஞ்சை நோயினால் நாட்டின் சில பிரதேசங்களில் சாதிக்காய் உற்பத்திக்கு பாதிப்பேற்பட்டுள்ளதாக ஏற்றுமதிப் பயிர் விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இப்பூஞ்சை நோயினால் ஒரு தடவை தொட்டால் கூட சாதிக்காயின் இலைகள் உதிர்வதாகத் தெரிவித்த பிரதிப் பணிப்பாளர் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போது பயிர்ச் செய்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சாதிக்காய்ப் பயிர்ச் செய்கையில் இலை உதிர் நோய் குறித்து உற்பத்தியாளர்களை அறிவூட்டுவதற்காக பயிர்ச் செய்கையாளர்களை நேரில் சென்று பார்வையிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். கண்டி, அலவதுகொட, திப்பிடிய, மற்றும் கொனகலகல போன்ற பிரதேசங்களில் உற்பத்தியாளர்களின் சாதிக்காய் செடிகளையும் இவ்விஜயத்தின் போது பரீட்சித்தார்.காற்றும் மற்றும் மழையினால் இந்த பூஞ்சை நோய் தொற்றுவதுடன், நோய் தொற்றிய மரத்தின் ஆரோக்கியம் குன்றி காய்களும் குறைந்து, மரங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இரசாயனக் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் மரங்களுக்கு இராசயனப் பதார்த்தம் மிக்க தடுப்பேற்றல் போன்றவை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மரங்களுக்கு விசுறுவதற்காக மேங்கோசெப்ட் இரசாயனத்தை செய்ததுடன், தடுப்பு மருந்தேற்றுவதற்காக டெபகெனசோல் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இரசாயனப் பதார்த்தங்களை விட, சாதிக்காய் துறையை பராமரிக்கும் செயற்பாட்டினால் இந்நிலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட ஏற்றுமதி பயிர் விவசாய திணைக்களத்தின் திட்ட அதிகாரி ஜயந்த சாமல், பூஞ்சை பரவியுள்ள பகுதிகளை, மரக்கிளை மற்றும் சாதிக்காய்களை ஏனைய மரங்களில் இருந்து வேறு படுத்தி எரித்து அகற்றுவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
தற்போது இத்தொற்று கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவித்த திட்ட அதிகாரி சாமல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை தமது திணைக்களத்தினால் வழங்க முடியும் என்றும் அவர் உறுதியளித்தார். இதன்போது காணி உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதிப் பயிர் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.