மதுரை: “தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது” என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சித்த மருத்துத்துக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட வைத்தியர்கள் சங்கத் தலைவர் நாகலி்ங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அசோக், வழக்கறிஞர்கள் கணபதி சுப்பிரமணியன், பகத்சிங், ஸ்டாலின், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹரிபரந்தாமன் கூறியது: “தமிழக ஆளுநர் தனது கருத்துக்கு எதிரான சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். அதில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஒன்று. தமிழக ஆளுநர், பாஜகவை சேர்ந்தவராகவும், எதிர்கட்சி போலவும் செயல்படுகிறார். தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அனைத்தும் அரசின் திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. ஆளுநர் போ்ஸ்ட் மேன் போலவே செயல்பட முடியும். ஆளுநரின் சட்டப்படியான அதிகாரம் நீட் மசோதாவில் தெரியும். நீட் விவகாரத்தில் மத்திய அரசு அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அதன்படி தமிழக அரசின் நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆளுநராக எந்த முடிவும் எடுக்க முடியாது. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டிய வேலையை கூட செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர். அவர் தனது அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் தமிழக மக்களின் உரிமைகளை நசுக்குகிறார். திமுக, அதிமுக தான் பெரிய கட்சிகள். இவ்விரு கட்சிகளும் ஒப்புதல் அளித்த மசோதாக்கள், தமிழகத்தின் 90 சதவீத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருத வேண்டும். அந்த வகையில் இரு கட்சிகளும் இணைந்து நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கூட அனுமதி வழங்காமல் துச்சமென மதித்து ஆளுநர் செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது” இவ்வாறு அவர் கூறினார்.