வாஷிங்டன் ;இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா, 62, தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, நம் அண்டை நாடான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் 2009-ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மாவட்ட நீதிமன்றம், பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து, ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில், பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்படும் வரை, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை நிறுத்தி வைக்கும்படி குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்னும் ஏற்கப்படாத நிலையில், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்மதம் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், விரைவில் சான்றிதழ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்