மதுரை:
மதுரையில்
தலைமையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த இடமே தற்போது பவுன்சர்களால் நிரப்பப்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் பவுன்சர்களின் கறுப்பு சட்டையை தவிர, காக்கி சட்டை ஒன்றை கூட கண்ணில் காண முடியவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
யார் ஒற்றை தலைமை என்கிற போட்டியில் அதிமுக இரண்டாக பிரிந்ததை அடுத்து, பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை தனது பக்கம் இழுத்து அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதனால் தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸும், அவரது ஆதரவாளர்களும் ஓரங்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், முக்குலத்தோருக்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார் என்ற மனநிலையை தேவர் இன மக்கள் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஓபிஎஸ் தரப்பு ஆழமாக விதைத்துவிட்டது.
இதனால் எடப்பாடி மீது கவுண்டர், வன்னியர்களுக்கான தலைவர் என்ற அடையாளம் பதிந்துவிட்டது. இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முக்குலத்தோர் வாக்குகளை கவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன் ஒருபகுதியாகவே, மறவர்களின் கோட்டையாக கருதப்படும் மதுரையில் மாபெரும் மாநாட்டை வரும் 20-ம் தேதி எடப்பாடி நடத்தவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஓபிஎஸ் தரப்பு மட்டுமல்லாமல் முக்குலத்தோர் இயக்கங்களும் தயாராகி வருகின்றன. மேலும், முக்குலத்தோர் அதிகம் இருக்கும் மதுரையில் எடப்பாடி தலைமையில் மாநாடு நடத்துவதால் அங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசு சார்பில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால், எத்தனை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் தங்கள் பங்குக்கு ஏராளமான பவுன்சர்களை இறங்கியுள்ள எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர். நாளை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இன்று வேனில் பவுன்சர்கள் படை அதிரடியாக களமிறங்கியது. தமிழ்நாட்டில் உள்ள பவுன்சர்களிலேயே மிகவும் திறமைசாலிகளாக கருதப்படும் பவுன்சர்களை இறக்கியுள்ளது அதிமுக. எடப்பாடி பழனிசாமியின் பிரத்யேக பாதுகாப்புக்காகவும், மாநாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவரை பாதுகாப்பாக அழைத்து செல்லவும் இந்த பவுன்சர்கள் வந்திருப்பதாக அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.