சீம்ஸ் (Cheems) என்று செல்லமாக அழைக்கப்படும் ‘Balltze’ என்ற நாய் 2010 சமயத்திலிருந்து இணையத்தில் மீம்ஸாக டிரெண்டானது. இப்படிப் பல வகை நாய்கள், பூனைகள் மீம் கதாபாத்திரங்களாகக் கொண்டாடப்பட்டாலும் அதில் சீம்ஸ் நாய்க்கு என்று தனி ஓர் இடம் உண்டு. குறிப்பாகத் தமிழிலும் சீம்ஸ் மீம்ஸ் ரொம்பவே பிரபலம். சீம்ஸ், பெர்ரோ, வால்டர் உள்ளிட்ட பல நாய்கள் இந்த மீம் கலாட்டாக்களில் இடம்பெறும்.

‘Shiba Inu’என்ற ஜப்பானிய நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாய்க்கு 12 வயது. ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த சீம்ஸுக்கு ‘Thoracentesis’ என்ற நீரை வெளியேற்றும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அப்படியான ஒரு சிகிச்சையின் போது கண்ணை மூடிய நாய் அதன் பின்னர் கண் திறக்கவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் அதன் உரிமையாளர். கீமோதெரபி, அறுவை சிகிச்சை எனப் பலவகை சிகிச்சைகள் செய்ய முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.






இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அதன் உரிமையாளர், “கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சையின் போது அவன் இறந்துவிட்டான். ஆனால், அவனது இழப்பை எண்ணி யாரும் வருத்தப்படத் தேவையில்லை. நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிறைய நினைவுகளையும், புகைப்படங்களையும் அவன் நமக்குத் தந்து சென்றிருக்கிறான். இப்போது அவன் தன் பணியை முடித்துவிட்டு சுதந்தரமாக அந்த வானத்தில் சுற்றித் திரியச் சென்றிருக்கிறான். என்றென்றும் மீம்களாக அவனது முகம் இணையதளத்தில் நம்மை மகிழ்வித்துக் கொண்டேயிருக்கும்” என்று நீண்ட பதிவு ஒன்றை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.