ராஜஸ்தான் கோட்டா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் `NEET’ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காகப் பல்வேறு பகுதியிலிருந்து வந்து அங்குத் தங்கிப் படித்து வருகின்றனர். ஏராளமான பயிற்சி மையங்களும் 25,000க்கும் மேற்பட்ட விடுதிகளும் அப்பகுதியில் இருக்கின்றன.
NEET தேர்வின் தோல்வியால் இந்தியா முழுவதும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவ்வகையில் கோட்டா பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கூட ‘IIT-JEE’ போட்டித் தேர்விற்காக அப்பகுதியில் இருக்கும் பயிற்சி வகுப்பில் பயின்று வந்த 18 வயது மாணவி ஒருவர், தான் தங்கியிருந்த விடுதியிலிருந்த பேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் பலர் பேன்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டமாகக் கோட்டா பகுதியில் இருக்கும் அனைத்து விடுதிகளிலும் ஸ்பிரிங் வைத்த பேன்கள் மாட்ட வேண்டும் என்று அப்பகுதி நிர்வாகமும், கமிஷனர் அலுவலகமும் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ‘Anti-suicide measure’ எனும் இந்த ஸ்பிரிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பேனில் 20 கிலோவிற்கு மேல் எடை தொங்கினால், அது தானாகவே நீளமாகிவிடும். அலாரமும் அடித்து அலெர்ட் செய்யும். இதனால் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயல்பவர்களைத் தடுக்கலாம். மேலும், மாதம் ஒருமுறை அல்லது அடிக்கடி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.