கமலிடம் யாரும் கேட்காத கேள்வி! கு.ஞானசம்பந்தனின் திரை பெருமை

'வாங்க சிரிக்கலாம்' என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறையில் படித்து அங்கேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். சோழவந்தானை சொந்த ஊராக கொண்ட இவர் மதுரையில் வசித்து வருகிறார். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி, நகைச்சுவை மன்றம், பட்டிமன்றம், இலக்கிய பேச்சு, தொலைக்காட்சி, சினிமா என வலம் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவரின் திரைப்பயணம் ஆரம்பமானது. பேராசிரியராக பணி ஓய்வு பெற்ற பின்பு தீவிரமாக நடிக்க துவங்கி, இதுவரை 45 படங்களில் நடித்து விட்டார். தற்போது 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலக அனுபவங்கள் குறித்து ஞானசம்பந்தன் கூறியதாவது: ஞானசூரியபகவான் என்பவர் தயாரித்த 'கந்தக வனம்' என்னும் குறும்படத்தில் இருந்து தான் எனது திரைப்பயணம் தொடங்கியது. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள் பிரச்னைக் குறித்த அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும்வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், டாக்டர் வேடத்தில் என்னை நடிக்க வைத்தார் தயாரிப்பாளர். குழந்தைக்கு ஊசிபோடும் காட்சி முதலாக எடுக்கப்பட்டது. ஸ்டார்ட் கேமரா என்றவுடன் பதட்டத்தில்குழந்தைக்கு பதிலாக, அதனை துாக்கி வைத்திருந்த நர்சின் கையில் ஊசியை செலுத்த சென்றுவிட்டேன். அப்போதுதான் நடிப்பு எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. 'விருமாண்டி' என்ற கமல் படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்களையும், வசனத்தையும் வட்டார மொழியில் எழுதிக் கொடுத்தேன். அப்போது கமல் விருப்பத்தில் ஜல்லிக்கட்டு அறிவிப்பாளராக திரையில்தோன்றினேன்.

இரண்டாவது படம் 'சிவா மனசில் சக்தி'. இதில் நடிக்கும் போது கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேமராமேன் சொன்னார். அடிக்கடி நான் கண்களை சிமிட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தவிர்க்க சொன்னார். இதையெல்லாம், இந்த உடல்மொழியை எப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என கமலிடம் கேட்டேன். அவர் '50 படங்களில் நடித்தவர்கள் கூட இதை கேட்க மாட்டார்கள்.

வசனத்தை உள்வாங்கி கதாபாத்திரமாக மாறி நடிக்கும் போது இந்த பிரச்னை போய் விடும்' என்று டிப்ஸ் தந்தார். கூடவே, 'இதுவரை என்னிடம் யாரும் கேட்காத கேள்வி இது' என்றும் சொன்னார். இது எனக்கு பெருமை. இதனால் நடிக்கும் காட்சிகளில் கையில் ஒரு பேப்பர், குச்சி, அல்லது வேஷ்டி நுனியைத் துாக்கி வருவது போல் நடிப்பேன். பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' படத்தில் நீதிபதியாக நடித்ததை கமல் உட்பட அனைவரும் பாராட்டினார்கள். பெரும்பாலும் சினிமாவில் என்னை ஒரு பேராசிரியர் என்ற மதிப்பீட்டில் வைத்துதான் கதாபாத்திரம் வழங்குகின்றனர். சமுத்திரகனி, சசிக்குமார் போன்றவர்களிடம் நான் கதை கேட்பதில்லை. அவர்கள் உரிய மரியாதை தரும் கதாபாத்திரங்களை மட்டுமே எனக்கு வழங்குவர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றால் கல்லுாரி பேராசிரியர், கதாநாயகியின் அப்பா என இந்த இரண்டு கேரக்டர்களை வைத்து பழக்கப்படுத்தி விட்டனர். மதன்பாப், பாண்டு, கவுண்டமணி, ஒருவிரல் கிருஷ்ணாராவ், அடடா கோபி உள்ளிட்டோர் பேராசிரியாக வந்து கேலியாக்கப்பட்டு விட்டதால், நான் அந்த வேடத்தை விரும்புவதில்லை. வசனங்களைப் படித்து பார்த்துவிட்டு மரபுக்கு மீறிய கதைகளையோ, வசனங்களையோ பேசுவதைத் தவிர்த்து நல்ல படங்களை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கின்றேன்.

ஆடுகளம், பொல்லாதவன் போன்ற பல படங்களுக்கு தென்மாவட்ட மொழி வழக்கில் வசனங்களை மாற்றி அமைத்துக் கொடுத்துள்ளேன். என்னை கவர்ந்த நடிகர்கள் பழம்பெரும் நடிகர் பாலையா, ரெங்காராவ், சுப்பையா என்பேன். இவர்கள் நடிப்பை இன்றுவரை யாரும் தொட்டது இல்லை. பாலையா நடித்த படத்தைப் பிறமொழியில் எடுப்பது கடினம். எத்தனையோ மேடைகளில் நகைச்சுவை சொற்பொழிவு நடத்தி இருக்கிறேன். ஆனால் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.