'காதலிசம்' தந்த சந்தோஷத்தில் சந்தோஷ்

அறிமுக கதாநாயகனாக 'டூலெட்' திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளவர் சந்தோஷ் நம்பிராஜன். இவரது 'காதலிசம்' திரைப்படம் திருமணம் செய்யாமலே இணைந்து வாழ்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசுகிறது.

முதல் படத்தில் சர்வதேச தர நடிப்பை தந்து அடுத்தடுத்த படங்களின் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சந்தோஷ் நம்பிராஜன் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து… “பிறந்து வளர்ந்தது தென்காசி. அப்பா விக்ரமாதித்தன் எழுத்தாளர், கவிஞர். சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட் ஒளிப்பதிவுத்துறையில் சேர்ந்தேன். ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவி ஒளிப்பதிவாளராக கல்லுாரி, தென்மேற்கு பருவக்காற்று, இரட்டைச்சுழி, பரதேசி படங்களில் வேலை செய்தேன். கத்துக்குட்டி, கருப்பம்பட்டி படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன்.

அப்போது செழியன், சர்வதேச தரத்தில் திரைப்படம் செய்வதாக கூறினார். என்னிடம் நடிக்கிறாயா என கேட்டார். என்னுடைய குருநாதர் என்பதால் நடிக்க என ஒத்துக் கொண்டேன். நடிப்பு பயிற்சி, முன் ஒத்திகை, பழைய கருப்பு வெள்ளை படங்கள் பார்த்தேன். அதில் இருந்து ஓரளவு நடிக்க கற்று கொண்டு டூலெட் படத்தில் நடித்தேன். உதவியாளர்கள் எல்லோரையும் குழந்தை போல பார்ப்பார் செழியன். நாங்கள் நிறைய கற்று கொண்டோம். புதிதாக யாராவது நடிப்பு கற்க ஐடியா கேட்டால் பழைய படங்களை பார்க்க அறிவுரை கொடுப்பேன். டெக்னாலஜி இல்லாத நேரத்தில் முழுக்க நடிப்பின் மூலமாகவும், திரைக்கதை மூலமாகவும் தான் படங்கள் நின்றன.

ஒரு விஷயத்தை உண்மையாக நேர்மையாக செய்தால் பிரதிபலன் நிச்சயம் உண்டு. டூலெட் உலக அங்கீகாரம் பெற்றது. சிறந்த மாநில மொழி திரைப்பட விருதை வென்றது. சினிமாத்துறையில் என்னை தெரிய வைத்தது. எனக்கு 'கோல்கட்டா இன்டர்நேஷனல் கல்ட் பிலிம் பெஸ்டிவல்' நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன்.

மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக வைத்து உருவான வட்டார வழக்கு என்ற கதையில் கதாநாயகனாக நடித்தேன். 'ஒரு பால் ஒரு சிக்ஸ்' என்பது தான் சினிமா வாழ்க்கை. தப்பி பிழைத்தல் என வரும் போது நாமாகவே பல விஷயங்களை கற்று கொள்வோம். திரையில் இன்னும் என்னை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்பதற்காக பல கதாபாத்திரங்களை எழுதி பார்த்தேன்.

'லிவிங் டுகெதர்' எனும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை சரி கிடையாது என எனக்கு பட்டது. அது குடும்ப அமைப்பை உடைக்க கூடியது. அதற்கு எதிராக படம் எடுக்க நினைத்தேன். அப்படி உருவானது தான் 'காதலிசம்'. நானே இயக்கினேன். ஓ.டி.டி.,யில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நல்ல படங்கள், நடிகர்களை தேர்வு செய்து கவனிக்கின்றனர்.

மரபு, நவீன இலக்கியத்தில் என் தந்தை நிறைய கவிதை எழுதி உள்ளார். எனக்கு பிடித்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். ஆனால் இலக்கியம் வேறு, திரைக்கதை வேறு. சினிமாவுக்கும் எழுதும் சூழல் வந்ததால் எழுத துவங்கி விட்டேன். உழைப்பாளர் தினம், வட்டார வழக்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன.

சினிமாவை பொறுத்த வரை செயல் தான் எல்லாம். நாம் தொடர்ந்து இயங்கினால் நம் படங்கள் ஒரு நாள் மக்களை சென்றடையும். நான் முதல் தலைமுறை சினிமாக்காரன் என்பதால் தினமும் கற்று கொண்டே இருக்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.