சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:
உணவுப் பொருள் வழங்கல் துறை: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜா ராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.அனந்த குமார், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநர் மற்றும் பயிற்சித்துறைத் தலைவராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர் அர்ச்சனா பட் நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராகவும், தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராகவும் மாற்றப் பட்டுள்ளனர்.
வரலாற்று ஆவண காப்பகம் ஆணையர் ஜி.பிரகாஷ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராகவும், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் வி.கலையரசி, சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் (கூடுதல் பொறுப்பு) ஆகவும் மாற்றப் பட்டுள்ளனர்.
சிறு தொழில் வளர்ச்சி கழகம்: மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி. வெங்கட பிரியா, ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவராகவும், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் விக்ரம் கபூர், தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழகம் தலைவராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
உதகமண்டலம் சிறப்பு மலைகள் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ராணா, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட அலுவலராகவும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் எஸ்.சரவணன், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் செயல் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக இருக்கும்மருத்துவர் கே.கோபாலுக்கு, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 15 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.