திருமலை: திருமலையில் பக்தர்கள் மலையேறி செல்லும் பாதைகளில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் உறுதியாகியுள்ளது. எனவே இவற்றை பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி இரவு அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல் பகுதியில் கர்னூலை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. உடன் சென்றவர்கள் கூச்சல் போட்டதும் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை ஓடியது. இதில் சிறுவன் காயம் அடைந்தான். இதையடுத்து கடந்த வாரம் நெல்லூரை சேர்ந்த லக் ஷிதா (6) எனும் சிறுமி, சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்தாள். இதனால் மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் பீதி அடைந்தனர். மேலும் மலைப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, புதிய அறங்காவலராக பதவியேற்ற திருப்பதி எம்எல்ஏ.வான கருணாகர் ரெட்டி, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார்.
அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பீதியால் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளிலும் பக்தர்களின் வரவு வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மார்க்கத்தில் ‘எலிபஃன்ட் காட்’ பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் வனத் துறையினர் கண்டறித்துள்ளனர். மேலும், திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் பின்புறம் கரடி ஒன்றின் நடமாட்டத்தையும் அவர்கள் அறிந்துள்ளனர்.
இதுதவிர ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்திலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கண்காணிப்பு கேமரா பதிவு செய்துள்ளது. திருமலைக்கு பக்தர்கள் செல்லும்வழிகளில் கொடிய விலங்குகள் நடமாட்டம் இருப்பது உறுதியானதை தொடர்ந்து இவற்றை பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.