புதுடெல்லி: மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைத்தேயி இன மக்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்க நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 சதவீதம் உள்ள குகி மற்றும் நாகா பழங்குடியினத்தவர்கள் கடந்த மே மாதம் 3-ம் தேதி, ‘பழங்குடியினர் ஒற்றுமை யாத்திரை’ நடத்தினர். அப்போது பெரும் கலவரம் வெடித்தது.
இதையடுத்து உயிர் பிழைக்க அருகில் உள்ள மியான்மர் எல்லைக்குள் மைத்தேயி மக்கள் பலர் சென்றனர். தற்போது மணிப்பூரில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மியான்மரில் தஞ்சமடைந்த 212 மைத்தேயி இன மக்களை, இந்திய ராணுவ அதிகாரிகள் பத்திரமாக மீட்டு வந்தனர்.
இதையடுத்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு கோரி மியான்மர் சென்ற 212 சக இந்தியர்களை பத்திரமாக ராணுவம் மீட்டுள்ளது நிம்மதியாக இருக்கிறது. ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கிழக்கு பிராந்திய கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.கலிதா, லெப்டினன்ட் ஜெனரல் எச்எஸ் சாஹி, கலோனல் ராகுல் ஜெயின் மற்றும்மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக ‘சத்பவன திவஸ்’ நிகழ்ச்சியில் முதல்வர் பிரேன் சிங் பங்கேற்று பேசியதாவது: மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்துவதுதான் மிக முக்கியம். நமக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சுயநலமாக இல்லாமல், பொதுநலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதுதான் தற்போது அவசியம். கலவரத்தில் மணிப்பூர் மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்த வேளையில் நாம் இரண்டு மடங்கு வேகமாக செயல்பட வேண்டும். அதன்மூலம் மணிப்பூரின் வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு முதல்வர் பிரேன் சிங் கூறினார்.
இதற்கிடையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 29 பெண் அதிகாரிகள் உட்பட மொத்தம் 53 அதிகாரிகளை சிபிஐ நியமித்துள்ளது.