மதுரை: அதிமுக மாநாட்டுத் திடலில் காலை முதலே குவியத் தொடங்கிய தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் உள்ளிட்டோர் மைக் மூலம் பேசினார். அப்போது, தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து ‘மதுரை சிறுத்ததோ, மாநாடு பெருத்ததோ’ போன்ற வார்த்தைகளால் உற்சாகப்படுத்தினர்.
தொண்டர்களை உற்சாகப்படுத்திய முன்னாள் அமைச்சர்: பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு திடலில் கொடியேற்ற வருவதற்கு முன்பு தொண்டர் படையினரின் அணி வகுப்பு ஒத்திகை நடந்தது. இதற்கான நடைமுறை, வார்த்தைகள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மைக் மூலம் ஒரத்த குரலில் பேசி, தொண்டர் படை யினர் தயார் செய்தார். தொடர்ந்து அவர் கட்சியின் சாதனைகள் குறித்து பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
பொதுச்செயலர் தங்கிய இடம் திடீர் மாற்றம்: மாநாட்டில் பங்கேற்க வரும் பொதுச் செயலர் கே.பழனிச்சாமி முதலில் மாநாட்டுக்கு அருகில் பரம்புப்பட்டியில் கட்சிக்காரரின் வீட்டு ஒன்றில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், திடீரென அது மாற்றப்பட்டு, சுற்றுச் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கிவிட்டு, காலையில் மாநாட்டு திடலுக்கு வந்தார். கொடியேற்றுதல், கட்சியின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குளை திறந்து வைத்துவிட்டு, மீண்டும் ஓட்டலுக்கு செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்ட கட்சிக்காரரின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு மாலையில் மாநாட்டில் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
தொண்டர்களை கவர்ந்த மாநாட்டு அரங்கம்: பொதுச் செயலர் வருவதற்கு முன்பே மாநாட்டு திடலில் திண்ட தொண்டர்கள், மாநாட்டு முகப்புப் பகுதியை பார்த்து வியந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற தொண்டர்கள், நிர்வாகிகள் குழு, குழுவாக ‘செஃல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
ஹெலிகாப்டர் தூவிய மலரில் நனைந்த தொண்டர்கள்: மாநாட்டை தொடங்கி வைக்க, பொதுச் செயலர் கே.பழனிசாமி காலை 8.30 மணிக்கு வந்தபோது, மாநாட்டு திடலை வட்டமிட்ட ஹெலிகாப்டரில் இருந்து 5 முறைரோஜா பூக்கள் தூவப்பட்டது. இது, பொதுச் செயலர் மற்றும் மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நிர்வாகிகளின் மேல் விழுந்தபோது, ”மலரில் நனைந்தோம்” என தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.