15 கோடி ஆண்டுக்கால பூமியின் வரலாற்றை விஞ்ஞானிகள் உப்பின் படிகங்களில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நுண்ணீரின் வேதியியலை பகுப்பாய்வு செய்ததன் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பகுப்பாய்வின்படி கடல் மற்றும் வளிமண்டலத்துக்கு இடையே நெருங்கிய தொடர்புண்டு என்பதைக் கண்டறிந்துள்ளனர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் புவி வேதியியலாளர் மெப்ராத்து வெல்டெகெப்ரியல் மற்றும் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் டிம் லோவென்ஸ்டீன் ஆகியோர் இணைந்து, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதை பற்றி விளக்கியுள்ள வெல்டெகெப்ரியல், “கடல் நீரில் வெறும் உப்பு மட்டுமே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் உப்பு மட்டும் இல்லை. அது பலவிதமான வேதிப்பொருள்கள் கலந்த கலவையாகும். இந்த உப்பு கலவை (கடல் ஹாலைட்) முழுமை பெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் அது ஹாலைட் உருவான காலத்திலிருந்து கடலின் ரசாயன கலவையை தன்னுள் திறம்பட பாதுகாக்கிறது” என தெரிவித்துள்ளார்.
வெல்டெகெப்ரியல் மற்றும் லோவென்ஸ்டைன் ஆகியோர் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள பல அமைப்புகளிலிருந்து ஹாலைட் மாதிரிகளை பெற்றனர். 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 65 ஹாலைட் படிகங்களிலிருந்து மொத்தம் 639 திரவச் சேர்க்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் ஹாலைட்டில் உள்ள சிறிய நீர் துளிகள் 15 கோடி ஆண்டுகளில் லித்தியம் செறிவில் ஏழு மடங்கு வீழ்ச்சியை காட்டியுள்ளது. இதனால் 11,50,000 முதல் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தை உருவாக்கிய குளிர்ச்சிக்கு இது காரணமாக இருக்கலாம் என கணித்துள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் லோவென்ஸ்டைன் கூறியதாவது, “பெருங்கடல்களும் வளிமண்டலமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. கடல் வேதியியல் மற்றும் வளிமண்டல வேதியியலுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் இரண்டிலும் ஏற்படும் மாற்றங்களும் ஒரே தன்மையுடையவை. கடலில் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.