ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டியதாக தகவல் வெளியானதில், படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான ‘ரஜினி 170’ படத்தின் பூஜை வரும் சனிக்கிழமை, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது என்ற பேச்சு இருக்கிறது. இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், அடுத்து லைகா தயாரிப்பில் ரஜினியுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனச் சொல்லியிருந்தோம். ரஜினி இமயமலை பயணத்திற்கு முன்னர், ‘ரஜினி 170’க்கான போட்டோஷூட்டையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினார். மூன்று நாட்கள் நடந்த இந்த போட்டோஷூட்டில் போலீஸ் சீருடையில் செம மாஸ் ஆக ரஜினி தோற்றம் தந்திருகிறார்.
‘ரஜினி 170’ ஒரு உண்மைச் சம்பவம் என்றும், போலி என்கவுன்ட்டர் குறித்த கதை இது என்றும் பேச்சு இருக்கிறது. வரும் வெள்ளியன்று லைகா தயாரித்த ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. விழாவில் தலைமை ஏற்க ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், பி.வாசு, லைகா என படத்தின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதால் இவ்விழாவில் ரஜினியும் நிச்சயம் பங்கேற்பார் என்கிறார்கள்.

இதனையடுத்த நாள் சனிக்கிழமை த.செ.ஞானவேலின் ‘ரஜினி 170’ பட பூஜையும் இருக்கிறது. அமிதாப்பச்சனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான ரோலில் விக்ரம், நானியிடம் நடிக்கக் கேட்டனர். ஆனால் அவர்கள் மறுத்துவிடவே சர்வானந்த் மற்றும் கன்னட இளம் இயக்குநர் மற்றும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டியிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், அவர் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும், படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டரில் பகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
வில்லனாகவே தமிழில் பல படங்களில் வந்த பகத் பாசிலுக்கு இந்தப் படத்தில் வேறொரு வித்தியாசமான ரோலாம். அதைக் கேட்டதுமே அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் ‘ஜெய்பீம்’ படத்தில் ஞானவேலுடன் இருந்தவர்களே தொடர்கிறார்கள். படப்பூஜை இந்த வாரத்தில் நடந்தாலும்கூட, படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதிக்கு மேலே தான் இருக்கும் என்கிறார்கள்.