"இன்று 500 கோடி வசூலிக்கும் படங்களில் ஒன்றுமே இல்லை. வன்முறை மட்டுமே!"- தங்கர் பச்சான் கருத்து

`சொல்ல மறந்த கதை’, `அழகி’, `பள்ளிக்கூடம்’, `ஒன்பது ரூபாய் நோட்டு’, `அம்மாவின் கைபேசி’, `களவாடிய பொழுதுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். ஒளிப்பதிவாளராகவும் பல படங்களில் பணியாற்றியவர்.

மெல்லிய உணர்வுகளைத் திரைப்படத்தின் வழியே கடத்துவதில் கைதேர்ந்த இயக்குநரான இவர், தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, எஸ். ஏ. சந்திரசேகர், அதிதி பாலன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். தந்தை மகனுக்கு இடையேயானப் பாசப்போராட்டதை மையமாகக் கொண்ட இப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரையைக் காணவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு 300 கோடி, 500 கோடி என வசூல் செய்யும் துப்பாக்கிகளும் ரத்தமும் நிறைந்த சமீபத்தியத் திரைப்படங்கள் குறித்தும் சிறிய திரைப்படங்களை எடுத்து வெற்றி பெறுவதில் இருக்கும் தடைகள் குறித்தும் வருத்தத்துடன் பேசியிருந்தார்.

‘கருமேகங்கள் கலைகின்றன’

இது பற்றிப் பேசிய தங்கர் பச்சான், “மக்கள் நல்ல சினிமாவை விரும்பிப் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். 200, 300, 500 கோடி என அதிகப் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒன்றுமேயில்லை என்றாலும் எளிதில் அப்படம் மக்களிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. மக்களும் அதைப் பார்க்கத் தயாராக இருக்கின்றனர். இன்று எடுக்கப்படும் பல படங்களில் துப்பாக்கிகள், கத்தி, கொலை, ரத்தம் என வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன. உயிரைக் கொல்வது என்பது சாதாரணமாகிவிட்டது.

இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் எந்த மனநிலையில் இருக்கும். இன்றைய படங்களில் அன்பு, பாசம், உயிர்கள் மேல் நேசம் போன்றவை குறைவாகவே இருக்கின்றன. இன்றைய மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அன்பை அதிகம் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. படத்திற்கு வசூலாகும் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்வது. இப்படங்கள் சில மாதங்களில் காணாமல் போய்விடும். வணிக வெற்றி மட்டும் போதாது, ஒரு திரைப்படம் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்க வேண்டும். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு கடமையிருக்கிறது. சமூகத்தைப் பற்றிய ஒரு அக்கறையிருக்கிறது.

தங்கர் பச்சான்

இப்படிப்பட்டப் படங்களுக்கிடையே ஒரு நல்ல படத்தை, சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தைப் பல தடைகள் கடந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இன்றும் என் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த மக்கள்தான், அவர்களுக்கு நான் நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும். பணம் மட்டும் வந்தால்போதும் என்று அந்த மக்களைக் கெடுக்க மாட்டேன்” என்றார்.

யோகி பாபு

மேலும், இப்படத்தில் நடித்துள்ள யோகி பாபு பற்றிப் பேசியவர், “யோகி பாபு ஒரு சிறந்த நடிகர். அவரை வெறும் சிரிப்பை மூட்டுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். அவரைப் பெரும்பாலும் யாரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை. இப்படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த நடிகர்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.