எடப்பாடிக்கு அந்த பட்டம்… கொடுக்க சொன்னாங்க, கொடுத்தேன்.. ஒரே போடாக போட்ட ஆதீனம்!

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கிய பிறகு தென்மாவட்ட அதிமுகவினர் ஆதரவையும், முக்குலத்தோர் ஆதரவையும்

இழந்துவிட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. இதனால் தனக்கு ஓபிஎஸ் சார்ந்திருக்கும் தென் மாவட்டங்களில் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. இதனால் பொன்விழா மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக கருதப்படும் மதுரையில் நடத்தப்பட்டது.

செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடு

மதுரை வலையங்குளம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொன் விழா மாநாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் தமிழகமெங்கிலும் இருந்து கூடியிருந்தனர். 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அப்போது, ஹெலிகாப்டர் மூலம் ரோஜா மலர்கள் அவர் மீது தூவப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை நிரூபிக்கும் கூட்டமாகவே இந்த கூட்டம் அமைந்தது.

கூட்டத்தில் ஒருபடி மேலே சென்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டத்தை நிலையூர் ஆதீனம், கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் இஸ்லாம் மதகுருமார் மூவரும் இணைந்து வழங்கினர். எம்.ஜி.ஆருக்கு புரட்சித் தலைவர், ஜெயலலிதாவுக்கு புரட்சித் தலைவி என்று பெயர் இருப்பது போலவே எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டதாக அதிமுகவின் கூறினர்.

புரட்சித் தொண்டன் உலகையே ஆள்வான் – பண்ருட்டி ராமச்சந்திரன்
நிலையூர் ஆதீனம் தந்த விளக்கம்

இந்த நிலையில் பட்டத்தை தானாக கொடுக்கவில்லை என நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தாராளமாக கொடுங்கள். என்னிடம் ஏன் வந்து கேட்கிறீர்கள் என்று கேட்டேன். பெரியவர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். சன்னியாசியான நான் அரசியல் மேடைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.

பின்னரும் எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் பட்டம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினர். என்ன பட்டம் என்று கேட்டேன். புரட்சித் தமிழர் பட்டம் என்று சொன்னார்கள். மூன்று மதத்தின் தலைவர்களும் இணைந்து கொடுத்தால் வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் மற்ற இரண்டு மதத் தலைவர்களையும் அழைத்து வந்தனர். மூன்று பேரும் கொடுத்துவிட்டு வந்தோம்.

புரட்சித் தமிழர் பட்டத்தை அவர்களாகவே தேர்ந்தெடுத்தார்கள். அதனை எங்களை வைத்து கொடுக்க வைத்தார்கள். புரட்சித் தமிழர் என்ற பட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்றவரா என்று நான் கருத்து கூற முடியாது. அவர்கள் கொடுக்கச் சொன்னார்கள். அவர்கள் சார்பில் நான் கொடுத்தேன்” என்று பேட்டியளித்துள்ளார். நிலையூர் ஆதினத்தின் அளித்துள்ள இந்த பேட்டி அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.