Big Breaking: வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி எல்விஎம் 3எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பலகட்ட பயணங்களாக நிலவின் சுற்றுப் பாதையில் நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து கலத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் பிரிந்தது.

தொடர்ந்து விக்ரம் லேண்டரை சுமுகமக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 5.44க்கு விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கும் என்றும் 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில், தரையிறங்குவதகாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான் 3 எப்படி நிலவில் தரையிறங்கப் போகிறது என்பதை காண இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மத வேறுபாடு இன்றி சிறப்பு பிராத்தனைகளை மக்கள் மேற்கொண்டிருந்தனர். விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டப்படி தரையிறக்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள இஸ்ரோ கட்டளை மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை அடுத்து அதில் இருந்து ரோவரும் நிலவில் இறங்கி அதன் ஆய்வு பணியை தொடங்கவுள்ளது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்தை மெய்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி காணொலி மூலம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியை தழுவிய நிலையில் அதில் இருந்து பல படிப்பினைகளை கற்று சந்திரயான் 3 திட்டத்தை பெற செய்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.