உலக தடகள போட்டி: போல் வால்ட்டில் தங்கப்பதக்கத்தை பகிர்ந்த வீராங்கனைகள்

புடாபெஸ்ட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று 35 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் இரு பிரிவிலும் ஸ்பெயின் ஆதிக்கத்தை நிலை நாட்டியது. இதன் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் வீரர் ஆல்வரோ மார்ட்டின் 2 மணி 24 நிமிடம் 34 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவருக்கு இது 2-வது தங்கப்பதக்கமாகும். ஏற்கனவே 20 கிலோமீட்டர் நடைபந்தயத்திலும் மகுடம் சூடியிருந்தார். இந்திய வீரர் ராம் பாபூ 29-வது இடத்துக்கு (2 மணி 29 நிமிடம் 51 வினாடி) தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார்.

பெண்கள் பிரிவில் ஸ்பெயினின் மரியா பெரேஸ் தங்க மங்கையாக (2 மணி 38 நிமிடம் 40 வினாடி) உருவெடுத்தார். அவரும் 20 கிலோமீட்டர் நடைபந்தயத்திலும் தங்கம் வென்று இருந்தார்.

1,500 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஷ் கெர் (3 நிமிடம் 29.38 வினாடி) ஒலிம்பிக் சாம்பியனான நார்வே வீரர் ஜேக்கப் இங்கப்ரிக்ட்செனை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஜேக்கப் வெள்ளிப்பதக்கத்துடன் (3 நிமிடம் 29.65 வினாடி) திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

பெண்களுக்கான போல்வால்ட் பிரிவில் (கம்பூன்றி தாண்டுதல்) ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் கேட்டி மூன், ஆஸ்திரேலியாவின் நினா கென்னடி இருவரும் அதிகட்சமாக தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தனர். 4.95 மீட்டர் உயரம் தாண்டுவதற்கு இருவரும் எடுத்த மூன்று முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பை பெறுவதற்கு பதிலாக இருவரும் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்து நடுவரிடம் தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்ட அதிசயம் அரங்கேறியது.

உலக தடகளத்தில் முதல்முறையாக தங்கத்தை கழுத்தில் ஏந்தியதும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட 26 வயதான நினா கென்னடி கூறுகையில், கேட்டி மூன் பதக்கத்தை பகிர்ந்து கொள்ளும் முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து கம்பூன்றி குதிக்க வேண்டி வரலாம் என்று நினைத்தேன். அவர் என்னை பார்த்து பதக்கத்தை பகிர்ந்து கொள்ளலாமா? என்று கேட்டார். உண்மையிலேயே அதை நம்ப முடியவில்லை. நாங்கள் இருவரும் நீண்ட கால தோழிகள். பதக்கத்தை கூட்டாக பெற்றது சிறப்பு வாய்ந்த ஒன்று. எல்லாமே கற்பனை போல் உள்ளது. தங்கம் வென்றதன் மூலம் எனது கனவு நனவாகிவிட்டது’ என்றார். பின்லாந்தின் வில்மா முர்டோ வெண்கலப்பதக்கம் (4.80 மீட்டர்) பெற்றார்.

2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் கியான்மார்கோ தம்பேரி (இத்தாலி), முதாஸ் பார்ஷிம் (கத்தார்) இருவரும் இதே போல் சரிசமமான உயரம் தாண்டிய பிறகு தங்கப்பதக்கத்தை பகிர்ந்து இருந்தனர். அந்த சம்பவத்தை நினைவூட்டுவது போல் இது அமைந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.