“உண்மையிலேயே விவசாயியாக வாழ்ந்த என் அப்பாவுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் அதை வாங்க அவர் இல்லாததுதான் வருத்தமாக உள்ளது” என்று கடைசி விவசாயி படத்தில் நடித்த பெரியவர் நல்லாண்டியின் மகள் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கும், சிறந்த நடிப்புக்கும் என இரண்டு விருதுகளை தமிழ் படமான கடைசி விவசாயி பெற்றுள்ளது அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் இப்படத்தில் நடித்த பெருங்காமநல்லூரைச் சேர்ந்த விவசாயி நல்லாண்டி என்ற முதியவரின் முதியவரின் நடிப்புக்கு சிறப்பு தேசிய விருது என இரு விருதுகள் கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் தொழில்முறை நடிகர் அல்லாத உசிலம்பட்டி வட்டாரத்த்தை சேர்ந்த கிராமத்து மக்களே அதிகம் நடித்திருந்தனர். அதில் முக்கிய வேடத்தில் பெரியவர் நல்லாண்டி நடித்திருந்தார். நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார். பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தை தயாரித்து முக்கிய வேடத்திலும் தோன்றினார்.
ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே பெரியவர் நல்லாண்டி கீழே விழுந்ததால் காலில் அடிபட்டு உடல் நலம் குன்றி மரணமடைந்தார். ஆனாலும், இப்படம் அனைவராலும் பேசப்பட்டது. இப்படம் விவசாயிகளின் இன்றைய நிலையை எடுத்து சொன்னதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெருங்காமநல்லூரில் வசிக்கும் பெரியவர் நல்லாண்டியின் மகள் மொக்கத்தாய், “விவசாயத்திற்காக உண்மையிலயே கஷ்டப்பட்டவருக்கு தேசிய விருது கிடைத்தது சந்தோசமா இருக்கு. உண்மையாகவே விவசாயியாக வாழ்ந்தவர், என் அப்பா வாழ்ந்த வாழ்க்கைக்கு விருது கிடைத்துள்ளது. இது சந்தோசமாக இருந்தாலும் அதை வாங்க அவர் இல்லாததுதான் வருத்தமாக உள்ளது” என்றார்.
தங்கள் வட்டாரத்தை சார்ந்த இயக்குநரால், தங்கள் பகுதியில் படமாக்கப்பட்ட கடைசி விவசாயி படத்துக்கும் மறைந்த பெரியவர் நல்லாண்டிக்கும் தேசிய விருது கிடைத்த செய்தி அறிந்து உசிலம்பட்டி வட்டார மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.