ஹைதராபாத்,தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சரின் தேர்தல் பிரமாண பத்திர முறைகேடு தொடர்பான புகாரில், தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட சிறப்பு செஷன்ஸ் நீதிபதியை, உயர் நீதிமன்றம் ‘சஸ்பெண்ட்’ செய்தது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீனிவாஸ் கவுட்.
தெலுங்கானாவின் மெஹ்பூப்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2018 சட்டசபை தேர்தல் பிரமாண பத்திரத்தில், பல உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை அளித்து உள்ளதாக ராகவேந்திர ராஜு என்பவர் எம்.பி., – எல்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜெயகுமார், அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டார். இதைஅடுத்து, இவர்கள் மீது கடந்த 11ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு செஷன்ஸ் நீதிபதி ஜெயகுமாரை சஸ்பெண்ட் செய்துள்ளது. புகார் மீது விசாரணை நடத்தாமல், தேவையற்ற அவசரத்துடன் செஷன்ஸ் நீதிபதி செயல்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement