மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனையே அலறவிட்ட திமுகவினர்.. பொது இடத்தில் வைத்தா இப்படி?

சென்னை:
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை திமுக பிரமுகர்கள் பணம் கேட்டு நச்சரித்து ஓட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள புகழ்பெற்ற டவர் பார்க் பூங்காவில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் ஓவியக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு தனக்கு பிடித்த ஓவியங்களை பணம் கொடுத்து வாங்கினார்.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், ஓவியக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த திமுக பிரமுகர் ஒருவர், “தொகுதி எம்எல்ஏவுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் கூட தகவல் தெரிவிக்காமல் நிகழ்ச்சி நடத்துறாங்க. எம்எல்ஏவையும், கவுன்சிலரையும் புறக்கணிக்கிற மாதிரில இருக்கு..” எனக் கூறினார்.

சுற்றிலும் நிருபர்களும், தொலைக்காட்சி லைவ் கேமராக்களும் இருந்ததால் சுதாரித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அவரது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதது போல அங்கிருந்த நகர முயன்றார். அப்போது அந்த திமுக பிரமுகர், “ஒரு ஸ்டாலுக்கு 2000 ரூபாய் வேண்டும்” என சத்தமாக கேட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ராதாகிருஷ்ணன், “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நானே அந்தப் பணத்தை உங்களுக்கு தந்துவிடுகிறேன் போதுமா” என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஆனாலும் ஆணையர் ராதாகிருஷ்ணனை விடாமல் துரத்திச் சென்ற சில கரைவேஷ்டி பிரமுகர், “அண்ணாநகர் டவர் பார்க்கில் வாரத்திற்கு 3 நாட்கள் ஏதாவது நிகழ்ச்சி நடக்கிறது. மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது” எனக் கூறினார். இதனால் பொறுமை இழந்த ராதாகிருஷ்ணன், “விடுங்க.. இனி அண்ணாநகர் டவர் பார்க்கில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. நாங்களும் வர மாட்டோம். நிகழ்ச்சி நடத்துறதுக்கு சென்னையில் நிறைய இடம் இருக்கு. அங்க நடத்திக்கிறோம். நீங்க கவலைப்படாதீங்க. ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை நடத்த விடுங்க” என ஆதங்கம் கலந்த குரலில் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வேகம் வேகமாக நகர்ந்தார்.

இருந்தபோதிலும், அவரை விடாமல் பின்னாலேயே சென்ற கட்சியினர் ஏதேதோ கேள்வி கேட்டபடியே பின்தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆணையர் ராதாகிருஷ்ணன், “நீங்க எங்கெங்கே எவ்வளவு வசூல் பண்றீங்கனு எனக்கு தெரியும். எல்லாத்தையும் லைவ் டிவியில் சொல்லிடுவேன்” என மிரட்டல் தொனியில் கரைவேஷ்டி பிரமுகர்கள் அப்படியே பின்வாங்கினர். ஒரு பொது இடத்தில் மக்கள் கலந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில் வைத்து ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூட பார்க்காமல் அவரிடமே ஆளுங்கட்சி பிரமுகர்கள் பணம் கேட்டது பொதுமக்களை முகம்சுளிக்க வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.