உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் இருக்கும், நேஹா பப்ளிக் பள்ளியின் ஆசிரியை த்ரிப்தா தியாகி என்பவர், கடந்த 24-ம் தேதி, 2-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் ஒருவன் வாய்ப்பாடு சரியாகச் சொல்லாததால், மற்ற மாணவர்களிடம் அவனை அடிக்கச் சொல்லியிருக்கிறார். வகுப்பு மாணவர்களும் வரிசையாக வந்து அந்த மாணவனின் கன்னத்திலும், முதுகிலும் அடித்தனர். அப்போது இஸ்லாமிய மாணவனின் மதத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்தும் ஆசிரியைப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு, காவல்துறை கோரிக்கைவிடுத்தது. மேலும், ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகக் குழந்தை உரிமைகள் அமைப்பும் தெரிவித்தது. இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், “பா.ஜ.க-வின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் விதைக்கப்பட்டது இதுதான்” எனக் கண்டனம் தெரிவித்தனர்.
முசாபர்நகர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அரவிந்த் மல்லப்பா பங்கரி, “சுமார் இரண்டு மணிநேரம் தன் மகன் சித்ரவதைக்குள்ளானதாகத் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த விவகாரத்தில் ஆசிரியை மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஆசிரியை த்ரிப்தா தியாகி, “அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்குமாரு அவரின் பெற்றோரிடமிருந்து அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி, அதனால், மாணவர்களை அடிக்கச் சொன்னேன். எனது தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் இந்த கிராம மக்களுக்கு ஆசிரியையாக சேவை செய்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். நாங்கள் பள்ளிகளில் குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
அதற்காக இப்படித்தான் அவர்களைச் சமாளிக்கிறோம். அந்த மாணவனை மதரீதியில் துன்புறுத்துவது எனது நோக்கமல்ல. இது தேவையில்லாமல் பெரிய பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கிறது” என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையோ, “என் மகனுக்கு வயது ஏழு. ஆசிரியர் என் குழந்தையை பலமுறை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

ஏதோ வேலைக்காக பள்ளிக்குச் சென்றிருந்த எங்களின் மருமகன்தான், என் மகன் அடிபடுவதை வீடியோ எடுத்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என் மகனை நிறுத்தி வைத்திருக்கிறார். இதை இந்து-முஸ்லிம் பிரச்னையாக அணுகவேண்டாம். சட்டப்படி அனைத்தும் நடக்கட்டும் என்றே விரும்புகிறோம். என் குழந்தை இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறான்” என்றார்.