பிரதமரை எதிர்த்து போட்டியிடுறேன்.. என்ன நம்புவீங்களா? – பரபரப்பை கிளப்பிய சீமான்

பிரதமர் நரேந்திர மோடி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முடுக்கிவிட ஆரம்பித்துள்ளன. பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

வடக்கே புன்னிய தலமான வாரணாசியில் போட்டியிட்டதுபோல தெற்கே உள்ள ஆன்மீக தளமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் கூட தனது பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்துதான் தொடங்கினார். பிரதமர் மோடி போட்டியிட்டால் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் பாஜகவிற்கு அது வலுவான அடித்தளமாக அமையும் என்பது ஒரு கணக்கு.

இந்த நிலையில் பிரதமர் மோடி போட்டியிடுவது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

கருத்து தெரிவித்துள்ளார். தூத்துகுடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இன்று நடந்த அபுபக்கர் திருமண நிகழ்ச்சியில் பேசிய சீமான், “இஸ்லாம் என்பது அநீதிக்கு எதிராக வந்த புரட்சி என்று பழனிபாபா சொன்னார். உங்களுக்காக அதிகமாக பேசியது நான் தான். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தேசிய இனமான தமிழினத்தின் மக்கள். அவர்களை சிறுபான்மையினர் என எப்படி கூற முடியும்? ஒருவர் மதம் மாறிவிடலாம். அவர்களின் மொழியையும், இனத்தையும் மாற்றிவிட முடியுமா? ஐயா பெரியார் கூறியது போல நான் பேசியதில் நல்லது ஏதாவது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து, “சிறுபான்மையினர் என்றால் சலுகை கிடைக்கும் என்கிறீர்கள். என்ன சலுகை கிடைத்துவிட்டது உங்களுக்கு. உரிமைதான் நமக்கு வேண்டுமே தவிர சலுகை அல்ல. அனைத்து மதங்கள் போதிப்பது பேரன்பும். நாங்கள் மதத்தை தாண்டிய மானுட நேயம் முக்கியம் என்று நினைக்கிறோம்.

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு உள்பட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் குரல் கொடுத்துள்ளேன். இஸ்லாமியர்கள் எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும். ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்.

அன்று நான் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கிறேன் என்று என்னை நம்புவீர்கள். நான் பேசியது பல ஆண்டுகளாக தாங்கி வரும் வலியின் மொழிதானே தவிர இஸ்லாமியர்களுக்கு வலியை ஏற்படுத்தும் எண்ணமும் இல்லை. ” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.