நமக்குள்ளே… பெண்கள் குறித்த இழிசொற்கள் நீக்குவோம்… மொழியை சுத்திகரிப்போம்!

பெண்கள்… உச்ச நீதிமன்றத்தை உச்சி முகரக்கூடியதொரு தருணமிது!

உலகின் உள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை… பெண்கள் குறித்த இழிசொற்கள். எங்கெங்கும் அவை நீக்கமற நிறைந்திருக்கின்றன. அம்மாவைக் கேவலப்படுத்தும் ஒரு சொல், தமிழகத்தின் பெரும்பாலான ஆண்களின் வாய்களிலிருந்தும் காரணமே இல்லாமல் வெடுக்கென முதலில் வந்துவிழும் ‘சர்வதேசிய சொல்’ என்பதாகவே மாறிக்கிடக்கிறது. திரைப்படங்களிலும் சென்சாரே இல்லாமல் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் சொல்லாகிவிட்டது.

தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கீழ்மையாகவும், அசிங்கமாகவும் குறிக்கும் எத்தனை எத்தனையோ சொற்களை அனிச்சையாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி வருபவர்கள்தான் நிறைந்திருக்கின்றனர். மெத்தப்படித்தவர்கள், மேதாவிகள், படைப்பாளிகள், அதிகாரமிக்கவர்களின் உலகில் இந்த சொற்களெல்லாம் சர்வசாதாரணம். ‘பெரிய மனிதர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட, ‘இதுல என்ன இருக்கு?’ என்று எகத்தாளமாகவே கடக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தகைய இழிநிலையை மாற்றும் முயற்சியாக, ‘பெண்களைக் கீழ்மைப்படுத்தும் விதமான சொற்களை இனி நீதிமன்றங்களில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆணாதிக்க வார்த்தைகளான `கீழ்ப்படிதலுள்ள மனைவி’, `விபச்சாரி’, `ஹவுஸ் வொய்ஃப்’, ‘தந்தை பெயர் தெரியாத குழந்தை’ போன்ற சொற்கள், நீதியறைகளில்கூட இயந்திரத்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. இது, அப்பெண்கள் குறித்த முன்முடிவுகளுடன் வழக்கை அணுக வைக்கும், நீதி வழங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அழுத்தமாகத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாலின பேதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் உருவாக்கப்பட்ட இதுபோன்ற சொற்களைக் களையும் கையேட்டையும் வெளியிட்டிருப்பது… மிக மிக முக்கியமானதொரு முன்னெடுப்பு.

எல்லா மொழிகளிலும் ‘கெட்ட வார்த்தைகள்’ என்பவை, பெண்களின் ‘நடத்தை’யைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன; பெண் உறுப்பையே வசைச் சொற்களாக உருவாக்கியிருக்கிறது வக்கிரம்பிடித்த இந்த உலகம். அலுவலகம் உள்ளிட்ட மொழி கடிவாளம் உள்ள இடங்களில்கூட, பெண்களைக் குறிப்பிடும் விதத்திலும், விகுதிகளிலும் அலட்சியமும், ஆதிக்கமுமே நிலவுகிறது. ஒரு பெண்ணை, அவர் மாநில முதல்வரே ஆனாலும், ‘அவ…’ என்றே குறிப்பிட்டுப் பேசுவதும், ‘வேலைக்காரி’, ‘சமையற்காரி’ போன்ற விகுதிச் சொற்களும் பலரின் அன்றாடங்களிலும் கலந்துள்ளது. மொழிக்கே உரிய துறைகளான இலக்கியம், இதழியல் போன்றவற்றிலும்கூட, பாலியல் பேதமற்ற சொற்கள் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஆசிரியருக்குப் பெண்பாலினச் சொல்லாக ஆசிரியை என்பதை பயன்படுத்தாமல், பெண் ஆசிரியர் என்றும் குறிப்பிடாமல், ‘ஆசிரியர்’ என்றே குறிப்பிடுவோம். இனி… பெண் இயக்குநர், பெண் மருத்துவர், பெண் அரசியல்வாதி, பெண் விமானி என்று யாரும் இல்லை. இயக்குநர், மருத்துவர், அரசியல்வாதி, விமானி…

தோழிகளே… இப்போது, இப்போதாவது நாம் செய்ய வேண்டியது, இப்படி பாலின பேதமற்ற மொழியைக் கையாள ஆரம்பிப்பதுதான், கற்றுக்கொடுப்பதுதான்!

களமாடுவோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

அடுத்த இதழ்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.