ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான ஆறுமுகம், கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான ஐந்து பசுமாடுகளை, கடந்த 25-ம் தேதி அதிகாலை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். வழக்கமாக காலை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்படும் மாடுகள் மாலை தாமாக வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். ஆனால் அன்று மேய்ச்சலுக்குச் சென்ற ஐந்து மாடுகளும், மீண்டும் மாலை வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதையடுத்து விவசாயிகள் நான்கு பேரும் தங்கள் குடும்பத்தினருடன் அன்று இரவு நீண்ட நேரம் மாடுகளைத் தேடியும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மறுநாள் 26-ம் தேதி கமுதி சுற்றுவட்டாரம் முழுவதும் தேடி அலைந்தும், மாடுகள் கிடைக்கவில்லை. அதையடுத்து இது குறித்து கோவிலாங்குளம் போலீஸில் புகாரளித்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பட்டி கிராமத்திலுள்ள கருவேலங்காட்டுக்குள், அந்த ஐந்து பசுமாடுகளும் ஆங்காங்கே வயிறு வீங்கி அழுகிய நிலையில் இறந்துகிடந்திருக்கின்றன.

இது தொடர்பாக நெரிஞ்சிப்பட்டி கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், மாட்டின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தங்கள் மாடுகள் இறந்துகிடப்பதைப் பார்த்துக் கதறி அழுதது, கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கோவிலாங்குளம் போலீஸார், மாடுகள் எப்படி இருந்தன என ஆய்வுசெய்தனர். அப்போது மர்ம நபர்கள் மின் கம்பத்திலிருந்து மின்கம்பிகள் மூலம் மின்சாரத்தை திருடி, தரை வழியாக கொண்டு வந்திருப்பதும், பூமியிலிருந்து வெளியே தெரிந்த மின்கம்பிகளை மிதித்த மாடுகள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு இறந்ததும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாடுகளை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், இதை உறுதி செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் மாடுகள் இறந்துகிடந்தது யாருக்கும் தெரியவில்லை என போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகார் அடிப்படையில், காட்டின் உரிமையாளர்களான முருகன், கண்ணாயிரம் ஆகியோரிடம் கோவிலாங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் சட்டவிரோத மின் இணைப்புகளாலும், பழுதான மின்கம்பங்களிலிருந்து தொங்கும் மின்கம்பிகளாலும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர், மின்வாரியத்துறை அதிகாரிகள் மூலம் பழுதான மின்கம்பங்களையும், சட்டவிரோத மின் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த பசு மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, மின் திருட்டில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன் வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY