புதுடெல்லி: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீரை திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நீர் திறக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14-ம் தேதி வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள நீர்வள அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது, தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகஸ்டில் வழங்க வேண்டிய நீரில் இன்னும் 54 டிஎம்சி வழங்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என்று கோரினார். அதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள், ‘‘அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அவ்வளவு நீர் திறக்க முடியாது’’ என்றனர்.
கூட்டத்தின் நிறைவில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, இக்கூட்டத்தில் புதுச்சேரி சார்பில், ‘‘காவிரி நீரை புதுச்சேரிக்கு திறந்துவிடும் காரைக்கால் வாய்க்கால் பகுதியில் தமிழகத்தின் பாசனப் பகுதிகளும் இருப்பதால் நீர் முழுமையாக எங்களுக்கு வருவதில்லை. எனவே, வாய்க்கால் அமைந்துள்ள இடத்தை மாற்ற வேண்டும். புதுவைக்கு தமிழகம் வழங்க வேண்டிய 0.6 டிஎம்சி நிலுவை நீரை திறக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, காவிரி ஒழுங்காற்று குழு செப்.7-ல் நேரில் ஆய்வு செய்ய உள்ளது. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகம், புதுச்சேரி அரசுகள் கூறியுள்ள நிலையில், அந்த இடங்களையும் குழு பார்வையிடும் என தெரிகிறது.