ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

புளோம்பாண்டீன்,

ஒரு நாள் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டேவிட் வார்னர் (106 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (124 ரன்) சதம் விளாசினர்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த தென்ஆப்பிரிக்க அணி 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் சீன் அப்போட், நாதன் எலிஸ், ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறுகையில், ‘பவர்-பிளேயான முதல் 10 ஓவர்களில் 100-க்கு மேல் ரன் திரட்டியது வியப்புக்குரிய ஒன்று. பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு சிறந்த நாள். பேட்டிங்கில் எங்களது திட்டமிடலை சரியாக செயல்படுத்தினோம். எஞ்சிய ஆட்டங்களிலும் இதே போல் அசத்துவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

தரவரிசையில் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி தரவரிசையில் சமீபத்தில் பாகிஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறி இருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்டதால் ஆஸ்திரேலியா (121 புள்ளி) மறுபடியும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் (120 புள்ளி) 2-வது இடத்துக்கு சறுக்கியது. இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.