ரயில் ஓட்டுனரின் கண்களை வைத்து துாக்கத்தை கண்டறியும் கருவி தயாரிப்பு| Development of a train drivers eye-detection device

புதுடில்லி:இன்ஜின் டிரைவருக்கு துாக்கம் வருவதை, அவரது இமைக்கும் கண்கள் வாயிலாக கண்டுபிடித்து, ரயிலை நிறுத்தும்படி எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவியை வடகிழக்கு எல்லை ரயில்வே உருவாக்கி வருகிறது.

ரயில் ஓட்டுனர்கள் கண்களை இமைப்பதை வைத்து அவர்கள் துாக்க கலக்கத்தில் உள்ளனரா என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கும்படி, வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு ரயில்வே வாரியம் கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியது.

சோதனை

இதையடுத்து, ஆர்.டி.ஏ.எஸ்., எனப்படும், ரயில்வே டிரைவர் உதவி பொறிமுறை என்ற கருவியை வடகிழக்கு எல்லை ரயில்வே உருவாக்க துவங்கியது.

இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்த கருவி, இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, இன்ஜின் டிரைவரின் கண்கள் இமைப்பதை கவனித்து, அவருக்கு துாக்கம் வருவதை உணர்ந்து எச்சரிக்கும்.

அப்போதும் ரயிலை அவர் நிறுத்தவில்லை எனில், அவசரகால பிரேக்குகள் தானாகவே இயங்கி ரயிலை நிறுத்தும்படி இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி தயாரானதும், சரக்கு மற்றும் பயணியர் ரயில்களில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

அதன் நிறை, குறைகள் ஆராயப்பட்டு, பின் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீண் வேலை

அதே வேளையில், இந்த கருவியை தயாரிக்கும் பணி வீணான வேலை என, இந்திய ரயில்வே லோகோ ரன்னிங்மேன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் செயல் தலைவர் சஞ்சய் பந்தி கூறியதாவது:

அனைத்து அதிவிரைவு ரயில்களிலும், டிரைவரின் காலடியில் ஒரு, ‘பெடல்’ இருக்கும். ஒவ்வொரு, 60 நொடிக்கும் டிரைவர் அந்த பெடலை காலால் அழுத்த வேண்டும்.

ஒருவேளை டிரைவர் அதை அழுத்த தவறினால், அவசரகால பிரேக்குகள் தானாகவே இயங்கி ரயிலை நிறுத்திவிடும்.

டிரைவர் விழிப்புடன் இருக்கிறாரா என்பதை கண்காணிக்க இந்த நடைமுறையே போதுமானது.

அப்படி இருக்கையில், இந்த புதிய கருவியை உருவாக்குவது வீண் வேலை.

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் ரயில்வே துறைக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், மற்ற விஷயங்களுடன், ரயில் ஓட்டுனர்களின் சோர்வு, பணி நேரம், வசதிகள் மற்றும் ஓய்வு நேரம் போன்ற அம்சங்களைப் பற்றிய ஆய்வு களை மேற்கொள்ள வேண்டும்.

பல சமயங்களில் பெண்கள் உட்பட ஓட்டுனர்களுக்கு, 11 மணி நேரத்திற்கும் மேலான பணியின் போது, உணவு உண்பதற்கோ அல்லது இயற்கை உபாதைகளை வெளியேற்றவோ நேரம் கிடைப்பதில்லை.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், ஆர்.ஏ.டி.எஸ்., போன்ற கருவிகள் தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.