Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வீழ்த்தியுள்ளது. அந்த வகையில், சூப்பர்-4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்று (செப். 10) கொழும்புவில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரின் குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஏற்கெனவே மோதிய நிலையில், அந்த போட்டி மழையால் ரத்தானது. குறிப்பாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்களை குவித்தது. இருப்பினும், மழை குறுக்கிட்டதால் இந்திய அணி அந்த போட்டியில் ஒரு பந்தை கூட வீசவில்லை. அந்த வகையில் இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆசிய கோப்பையில் இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே முறை அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் நாளையும் இதே மைதானத்தில் போட்டி தொடர வாய்ப்புள்ளது.
அந்த வகையில், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணி வங்கதேச அணி உடனான அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பிடிப்பு
கடந்த நேபாள அணியுடனான போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஷமி ஆகியோருக்கு பதில் கே.எல். ராகுல் மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள முதுகு பிடிப்பு காரணமாக இந்த போட்டியில் அவர் இடம்பெறவில்லை என ரோஹித் சர்மா டாஸின் போது கூறினார். மேலும், தாங்கள் டாஸை வென்றிருந்தால், முதலில் பேட்டிங் செய்ய தான் திட்டமிட்டிருந்தாகவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் நான்காவது இடத்தில் இஷான் கிஷனும், ஐந்தாவது இடத்தில் ராகுலும் களமிறங்குவார்கள். இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் இடது கை பேட்டர் கிடைத்திருப்பது சற்று சாதகமாக அமையலாம். பந்துவீச்சில் சிராஜ், பும்ராவுடன் ஷர்துலும் தாக்குதல் தொடுப்பார். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் வழக்கம்போல் ஆல்-ரவுண்ட் பெர்ஃபாம்ன்ஸ் கொடுக்க தயாராக உள்ளனர். தொடக்க ஓவர்களில் மட்டும் விக்கெட்டை விடாமல் இந்தியா சிறப்பாக விளையாடினால், அது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
Toss & Team News
Pakistan have elected to bowl against #TeamIndia.
A look at our Playing XI
Follow the match https://t.co/kg7Sh2t5pM#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/fkABP5uWxr
— BCCI (@BCCI) September 10, 2023
பிளேயிங் லெவன்
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவ்ஃப்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.