உயர் கல்விக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லாத மலை மாவட்டமான நீலகிரியைச் சேர்ந்த பெண்கள், கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் தடம் பதித்து வருகின்றனர். ராணுவம், கடற்படை என அவர்கள் உயரத்தை எட்டிவரும் நிலையில், பெண்கள் பிரிவில் நீலகிரியைச் சேர்ந்த முதல் விமானியாக தென்னாப்பிரிக்க வானில் சிறகை விரித்து பறந்து வருகிறார், கோத்தகிரி அருகில் உள்ள குர்கத்தி படுகர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ.

தென்னாப்பிரிக்காவில் 6 மாத காலம் பயிற்சியை நிறைவு செய்து சிறிய ரக தனியார் விமானங்களை இயக்கும் விமானியாக உரிமம் பெற்றிருக்கிறார் ஜெயஸ்ரீ. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான அடுத்த இலக்கை நோக்கி வானில் வட்டமடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
பெண்களில் நீலகிரியின் முதல் விமானியாக தடம் பதித்திருக்கும் 27 வயது ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகளை தெரிவித்துப் பேசினோம். “சிறுவயதிலிருந்தே பைலட் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. உயர்கல்வி படிப்பை முடித்து ஐ.டி துறையில் வேலை செய்தாலும் என்னுடைய பைலட் லட்சியம் அப்படியே இருந்தது. கொரோனா சமயத்தில் அதற்கான முயற்சியில் இறங்கினேன். பைலட் தேர்வுக்குத் தயாராகி தேர்ச்சியும் பெற்றேன்.

தென்னாப்பிரிக்காவில் பயிற்சி பெற வாய்ப்புக் கிடைத்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் கிளம்பினேன். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆதரவு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. பல சவால்களை எதிர்கொண்டு மன உறுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டேன்.
சிறிய ரக தனியார் விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றேன். இதன்மூலம், பெண்கள் பிரிவில் நீலகிரியின் முதல் விமானி என்ற பெருமையை அடைய முடிந்தது. இலக்கை அடைய பாலினம் ஒரு தடை இல்லை.

எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் சாதிக்கலாம். எனது இந்த வெற்றி பல பெண்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறேன். பெரிய ரக பயணிகள் விமானத்தை இயக்குவதே எனது அடுத்த இலக்கு ” என நம்பிக்கையுடன் கூறிய ஜெயஸ்ரீக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.