மைசூரு : சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு, மைசூரில் நடந்த மடாதிபதிகள் மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணதாமா சாதுர்மாஸ்ய சமிதி, விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து, மைசூரு கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தின் நாதமண்டபம் அரங்கில், மடாதிபதிகள் மாநாடு மற்றும் தர்மசபா மாநாடு நேற்று நடந்தது.
மாநாட்டை துவக்கி வைத்து உடுப்பி பெஜாவர் மடாதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பேசியதாவது:
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு, அதே வகையில் தக்க போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். சமூகத்தில் உள்ள பிழைகளை சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால், ஒரு தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என்பது சரியில்லை.
நாட்டில் சனாதன தர்மத்தை சேர்ந்தோர் ஏராளமானோர் உள்ளனர். மணிப்பூரில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பற்றி எரிகிறது. இதை இன்னும் அணைக்க முடியவில்லை. இதுபோன்று பற்றி எரியும் வேலை அதிகரித்தால், நாட்டில் அராஜகம் அதிகரிக்கும்.
இத்தகைய செயல்பாடுகளை முளைக்கும் போதே கிள்ளி எறிய வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகிறது. இதை விட முக்கியமாக, ராம ராஜ்யம் உருவாக வேண்டும்.
பிரஜா ராஜ்யம் உருவாக வேண்டும் எனில், தர்மத்தின் சூத்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ராவணன் போன்று மன நிலையை கொண்டவர்களை புறக்கணிக்க வேண்டும்.
மைசூரு சாமுண்டி மலையில், மஹிஷாசூரன் தசரா விழாவை நடத்த சிலர் முற்பட்டுள்ளனர். இப்படி விட்டால், சகுனி போன்றோரின் தசரா விழாவும் கொண்டாடுவர். இதற்கு எதிராக நிலையாக நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சனாதன தர்மத்தை விமர்சித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதியையும்; காங்கிரஸ் அரசின் இலவச வாக்குறுதி திட்டங்களையும் பல மடாதிபதிகள் கண்டித்தனர்.
முக்கிய தீர்மானங்கள்
l முந்தைய அரசு கொண்டு வந்த கர்நாடக பசுவதை தடை சட்டம்; கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
l டிவி, ஓ.டி.டி., சமூக வலை தளங்களுக்கும் சென்சார் முறை கொண்டு வர வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்