டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு தேச தந்தை மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் வகையில், அவர்கள் அனைவரும் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஒரே நேரத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி உலகத் தலைவர்கள் அனைவரும் நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்று கதர் சால்வை அணிவித்தார். பிரதமர் மோடி காலணியை கழற்றி விட்டு வெறும் காலில் காந்தி நினைவிடத்துக்குள் சென்றார். இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் காலணியின்றி வெறும் காலில் காந்திநினைவிடத்துக்குள் நுழைந்தனர். விரும்புவர்களுக்கு சிறப்பு காலணி மற்றும் சப்பல்ஸ் வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் சில்வா ஆகியோர் வெள்ளை நிற சிறப்பு காலணியை அணிந்து சென்றனர். பலர் வெறும் காலுடனும், சிலர் சாக்ஸ் மட்டும் அணிந்தபடியும் அஞ்சலி செலுத்த சென்றனர். அனைவரும் காந்தி நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்று கொடுத்ததையும், கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அடைந்துள்ள வளர்ச்சியையும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு நினைவுபடுத்துவதுபோல் இந்த நிகழ்ச்சி அமைந்தது.