ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட யுவன்சங்கர் ராஜா

கடந்த செப்-10ஆம் தேதி ஞாயிறன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்காய்ந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது, இவற்றின் மூலம் ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிகளால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு அவப்பெயரை தேடித் தந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது மேடையில் தான் இசையமைப்பாளர்களின் கவனம் எல்லாம் இருக்கும் என்றாலும் கூட பார்வையாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான வருகை வசதி, இருக்கை வசதி, போக்குவரத்து, குடிநீர், உணவு வசதி என அனைத்தையுமே முறையாக ஏற்பாட்டாளர்கள் செய்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டியதும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இசையமைப்பாளர்களின் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டி வந்து காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் பெரும்பாலானோர் ஏ.ஆர் ரஹ்மான் மீது தங்கள் வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர் ராஜா, ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது ;

ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருட்களை வரவழைப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை சமாளிப்பது என அனைத்தையும் சரிவர செய்து அதை நடத்திக் காட்டுவது என்பது மிகவும் சிக்கலான பணி. இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் எதிர்பாராத சில பிரச்சினைகள் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது. நல்ல நோக்கங்கள் கூட நமது இசையை ஆராதிக்கும் நமது ரசிகர்களிடம் தவறாக போய் விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், ஏற்பாட்டாளர்களும் இந்த நிகழ்வில் தங்களை பிரதிபலிப்பது தான் இங்கே முக்கியமானது. இசைக்கலைஞர்களாக நாங்கள் மேடையில் இருக்கும் சமயத்தில் அனைத்துமே மென்மையாக நடக்கும் என்றும், எங்களது ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்ற தயாரிப்பாளர்கள் மீது தான் முழு நம்பிக்கையும் வைத்திருக்கிறோம்.

இப்போது அந்த சூழ்நிலையில் நடந்திருக்கும் விஷயங்களை பார்க்கும்போது உண்மையிலேயே மனமுடைந்து போகிறது. மேலும் நான் உட்பட இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சிக்கான திட்டமிடுதலிலும் பாதுகாப்பு காரணிகளிலும் முக்கிய பங்கு எடுத்து கவனிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. ஒரு இசையமைப்பாளராக துரதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வுகள் நடந்ததாக கருதி, இந்த சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிவதுடன், ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இரவை இந்த இசை நிகழ்ச்சி மூலம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை நடத்திய ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாகவும் நிற்கிறேன்.

இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு இன்னும் மேம்படுத்தல்கள் செய்யப்படும் என்பதுடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இனி எதிர்காலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்பு மற்றும் சவுகர்யத்தை ரொம்பவே கவனம் எடுத்து செயல்படுத்துவார்கள் என்றும் நம்புவோம்” என கூறியுள்ளார்.

சக இசையமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக இப்படி யுவன்சங்கர் ராஜா குரல் கொடுத்தை பலர் வரவேற்றாலும், இது போன்ற பிரச்சனைகளால் நாளை இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முழுவதுமாகவே ஒரு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களை மனதில் வைத்து, வரும் நாட்களில் இசை நிகழ்ச்சிகளை புறக்கணிக்க துவங்கி விடுவார்களோ என்கிற எண்ணத்திலும், தான் இப்படி அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் இரு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.