தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்டவரின் உறவினரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரின் மகன் மகேந்திரன் (வயது 40), ஒர்க் ஷாப் வைத்து நடத்திவருகிறார். மகேந்திரனின் மனைவி பெயர் மகாலட்சுமி. இனாம்ரெட்டியாப்பட்டியில், அந்தோணிசாமிக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டம் தொடர்பான வேலைகளை மகாலட்சுமியும், அந்தோணிசாமியும் கவனித்து வருகின்றனர். இவர்களின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (34). உறவினர்களான அந்தோணிசாமியும், மாரியப்பனும் தங்களுக்கு பொதுவான கிணற்றிலிருந்து வாரத்துக்கு இரண்டு நாள்கள் என சுழற்சி முறையில், அவரவர் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சி வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்னையில் மாரியப்பனை, மகேந்திரன் கண்டித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், மகேந்திரனை பழிவாங்குவதற்காக இன்றுகாலை நோட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு மேல் தோட்டத்திலுள்ள பம்ப் செட்டில் மகேந்திரன் குளித்துக்கொண்டிருப்பதை நோட்டமிட்ட மாரியப்பன், தான் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் மகேந்திரனை பின்தலையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பின்கழுத்து முதல் காது வரை பலமான வெட்டு விழுந்ததில், மகேந்திரன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்திருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக சூலக்கரை போலீஸூக்குத் தகவல் கிடைக்கவும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் மாரியப்பனைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில், கைதுசெய்யப்பட்ட மாரியப்பன் தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்திருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு மகேந்திரன்தான் காரணம் என நினைத்த மாரியப்பன், அவர்மீது விரோதத்துடன் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்னையில் அவரை திட்டமிட்டுக் கொலைசெய்திருக்கிறார்.