இந்தியா- இலங்கை அணிகள் மோதும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று கொழும்பில்இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரேமதாசா மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், இதனை கருத்தில் கொண்டு அவரை டாஸ் வெற்றி பெற்றுடன் பேட்டிங்கை எடுத்துவிட்டார். ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இதே மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்ததார். அதனால், இமாலய தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
சுப்மான் கில் அவுட்
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங் பேட்டிங் இறங்கினர். நிதானமான ஆட்டத்தையே இருவரும் வெளிப்படுத்தினர். குறிப்பாக சுப்மான் கில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதுபோல், இலங்கை அணிக்கு எதிராக ஆட முடியவில்லை. ஏனென்றால் ஒரு முனையில் வேகப் பந்துவீச்சும், இன்னொரு முனையில் சுழற்பந்துவீச்சையும் கொண்டு வந்தார் இலங்கை கேப்டன் தஷூன் ஷானகா. இதில் தடுமாறிய சுப்மான் கில் 19 ரன்களுக்கு இளம் சுழற்பந்துவீச்சாளரான துனித் வெல்லலகே மாயாஜால பந்தில் போல்டாகி வெளியேறினார்.
ரோகித் சர்மா அரைசதம்
ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியிலும் அரைசதம் விளாசினார். 48 பந்துகளை எதிர்கொண்ட அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். அவரும் துனித் வெல்லலகே பந்திலேயே போல்டானார். செட்டிலாகிவிட்டார் என நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில் மிகவும் லோவாக வந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் போல்டானார்.
விராட் கோலி – ராகுல் ஏமாற்றம்
ஓப்பனர்கள் இருவரும் வெல்லலகே பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், விராட் கோலியும் எதிர்பாராதவிதமாக வெல்லலகே சுழலில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். ஷார்ட் பிட்ச்சாக வந்த பந்தை தட்டிவிட்டு ஓடி ரன் எடுக்கலாம் என அடித்தபோது, ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த பீல்டரிடம் பந்து கேட்சாக தஞ்சமடைந்தது. அடுத்து வந்த கே.எல்.ராகுலும் வெல்லலகே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி டாப் 4 பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து தடுமாற்றத்தில் சிக்கியிருக்கிறது.
துனித் வெல்லலகே பொறுத்தவரை 20 வயது மட்டுமே ஆகிறது. 13 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அவரின் இன்றைய பந்துவீச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.