பெண்களுக்கு தற்போது சுதந்திரம், தைரியம், வேலை வாய்ப்புகள் என கிடைத்துவரும்போதும், முன்பைவிட அவர்கள் அதிகக் கவலை, மனச்சோர்வு, கோபம், தனிமை மற்றும் அதிக அமைதியற்ற தூக்கம் போன்ற மனநலச் சவால்களை எதிர்கொள்வதாக, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க உளவியல் சங்கத்தால் பல நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலும் அனைத்தும் நாடுகளிலும் இதே முடிவே கிடைத்துள்ளது. பல தரப்பு வயதுடைய பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆண்களை விடவும் பெண்கள் அதிக மனக் கவலையுடன் இருப்பதாக இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்களைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பராமரிப்பாளராக உள்ளனர்.
பலர், வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை என இரட்டைச் சுமைகளையும் சுமக்கின்றனர். மேலும் பலர் தங்கள் பணியிடங்களில் கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை மற்றும் சமூக சமத்துவமின்மையை இன்னமும் எதிர்கொள்கிறார்கள் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், பெண்கள் ஆண்களை விட அதிக அர்த்தமுள்ள மற்றும் சிறந்த நோக்கத்துடன் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். பெண்கள் ஆண்களை விட அதிக சமூகத் தொடர்புகளுக்கு மதிப்பு கொடுப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நட்பு மிகவும் நெருக்கமானது மற்றும் அவர்கள் மற்றவர்களை நேருக்குநேர் தொடர்புகொள்வதையே விரும்புகிறார்கள். பிறரின் ஆதரவு மற்றும் உதவியைப் பெறுவதில் ஆண்களை விடப் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

மேலும், பெண்கள் மற்றவர்களை ஆதரிப்பது மற்றும் தன்னார்வத் தொண்டு போன்ற முயற்சிகளில் அதிகம் ஈடுபட முனைகிறார்கள் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் துன்பத்தை அனுபவித்தாலும் சரி, பல விஷயங்களில் சிறந்து விளங்கினாலும் சரி… தங்கள் மனதளவில் அதிக கவலையுடனேயே இருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவாகக் கூறப்பட்டுள்ளது.