தேனிலவுக்குச் செல்கையில், பலருக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படுவது சகஜமான விஷயம்தான். ஆனால், அந்தக் கிருமித்தொற்று, சம்பந்தப்பட்ட தம்பதிகளை நிரந்தரமாக பிரித்து விடவும் செய்யலாம் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால், இது உண்மை என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.
‘அவர்களுடையது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேனிலவுக்கும் சென்றிருக்கிறார்கள். அங்குதான் அந்தப் பிரச்னை வந்திருக்கிறது. அதாவது, அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் கிருமித்தொற்றால் எரிச்சலும் வலியும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிக்கவே முடியாத அளவுக்கு எரிச்சல் ஏற்படவே, தேனிலவை கேன்சல் செய்துவிட்டு, மகப்பேறு மருத்துவரை சந்தித்திருக்கிறார்கள். அவர் ஆலோசனையின் பேரில் சிகிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண். ஆனால், அப்போதும் பிரச்னை சரியாகவில்லை.
நன்கு படித்த பெண் என்பதால், `ஒருவேளை ஹஸ்பண்டுக்கு பால்வினை நோய் ஏதாவது இருக்குமோ… அது நமக்கும் தொத்திக்கிச்சோ…’ என்று சந்தேகப்பட்டவர், அதை தன் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான்… இருதரப்பு பெற்றோர்களுக்கும் இடையே சண்டை மூண்டு, பெரிய பிரச்னையாகி விட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் அந்த இளம் தம்பதியினர் என்னை சந்தித்தார்கள்.
அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு வந்திருப்பது ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் (Honeymoon cystitis) என்பது தெரிந்தது. இது சிறுநீர்ப்பையில் வருகிற ஒரு தொற்று, அவ்வளவே..!
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி சிறுநீர் கழிக்கும் துவாரத்தின் ஆரம்பத்தில் எப்போதுமே கிருமிகள் இருக்கும். ஆண்களுக்கு சிறுநீர்ப்பாதையின் நீளம் 18 செ.மீ. உறுப்பின் நுனியில் இருக்கிற கிருமிகள் உள் சென்றாலும், அதனால் பிரச்னை நிகழ்வதற்குள் அவை சிறுநீர் கழிக்கும்போது வெளியேறி விடும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, பெண்ணுறுப்புக்கு ஒரு செ.மீ. மேலேதான் சிறுநீர்ப்பாதை இருக்கும்.

பெண்களுடைய சிறுநீர்ப்பாதையின் நீளமும் 2 செ.மீ. தான். இதனால், முதல்முறையாக தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, டீப் பெனட்ரேஷன் தரும் அழுத்தம் காரணமாக சிறுநீர் கழிக்கும் பாதையின் ஆரம்பத்தில் இருக்கும் கிருமிகள் உள்ளே சென்று விடலாம். விளைவு, கிருமித்தொற்று இருந்துகொண்டே இருக்கும். திருமணத்துக்கு முன்பு வரை இந்தப் பிரச்னையை சந்தித்திராத பெண்கள், ‘இவரு தப்பான பொண்ணுங்களோட உறவு வெச்சிருப்பாரோ… அதனால இவருக்கு பால்வினை நோய் இருக்குமோ… அது நமக்கும் வந்திடுச்சோ…’ என்று கணவர் மீது சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். நான் மேலே சொன்ன தம்பதியர் விஷயத்திலும் இதுவே நடந்திருந்தது. இதைப்பற்றி, அந்தப் பெண்ணிடம் எடுத்துச்சொல்லி, சிகிச்சையளித்த பிறகு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள்.
இந்த ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் (Honeymoon cystitis) பிரச்னை, திருமணமான புதிதில் மட்டுமல்ல… திருமணமாகி பல வருடங்களான பெண்களுக்கும் வரலாம். சிலர், எண்ணெய் தடவுவது, இரண்டு நாள் மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டு விடுவது என்று இருப்பார்கள். சிலர், அவர்களுடைய கணவரை என்னிடம் அழைத்து வந்து, ‘இவருக்கு ஏதோ செக்ஸ் வியாதியிருக்கு டாக்டர். நல்லா செக் பண்ணுங்க’ என்று அழுவார்கள்.
அவர்கள் சொன்னபடி பரிசோதனை செய்துபார்த்தால் ரிசல்ட் நார்மல் என்று வரும். கணவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்கள் மனைவியைத் தவிர்த்து மற்ற பெண்களுடன் உறவு வைக்காதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கும் ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் பற்றி எடுத்துச்சொல்லி சிகிச்சை செய்து அனுப்புவேன்” என்றவர் தொடர்ந்தார்…

“இந்தப் பிரச்னை 5 வயதுக்கு குறைவாக இருக்கிற ஆண் குழந்தைகளுக்கும், புராஸ்ட்டேட் சுரப்பி வீங்குவதால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் வரலாம்.
கர்ப்பிணிகளுக்கு இந்தப் பிரச்னை வந்தால், கருச்சிதைவுகூட ஏற்படலாம் என்பதால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை சந்தித்துவிட வேண்டும்.
சிறுநீர்ப்பாதையில் கிருமித்தொற்று ஏற்பட்டால், வழக்கமான ‘யூரின் கம்ப்ளீட்’ பரிசோதனை செய்வதோடு நிறுத்தாமல், ‘யூரின் கல்ச்சர்’ பரிசோதனையும் செய்து, குறிப்பாக எந்த வகையான கிருமியால் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை திரும்பத் திரும்ப வராமல் இருக்கும்.

கிருமித்தொற்று நிகழாமல் இருப்பதற்கும் ஒருவழி இருக்கிறது. அதாவது, பெண்கள், தாம்பத்திய உறவுக்கு முன்னால் சிறுநீர் கழிக்காமல் இருந்துவிட்டு, உறவு முடிந்தவுடனே சிறுநீர் கழித்துவிட்டால், கிருமிகள் வெளியேறி விடும். பல குடும்பங்களில் பிரச்னை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கணவர் மீது சந்தேகப்படாதீர்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.