புதுடெல்லி: டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: டீசல் இன்ஜின் வாகனங்களின் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிசீலனையில் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.
2070-ம் ஆண்டுக்குள் கார்பனை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதற்கு டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசு அளவை கணிசமாக குறைக்க வேண்டும். இதற்கு ஆட்டோமொபைல் துறையில் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது அவசியம். இந்த எரிபொருள்கள், டீசலுக்கு சிறந்த மாற்றாகவும், செலவு குறைந்ததாகவும், உள்நாட்டைச் சார்ந்ததாகவும், மாசு இல்லாததாகவும் இருப்பது அவசியம். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல்களுக்கு தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, வாகனத்தின் வகையைப் பொருத்து 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை கூடுதல் செஸ் விதிக்கப்படுகிறது.