லிபியாவை புரட்டிப்போட்ட புயல்: நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்

திரிபோலி,

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகளும் இயற்கை சீற்றத்தால் பேரழிவுக்கு உள்ளாகின்றன. அதன்படி கடந்த 8-ந் தேதி ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை 2 ஆயிரத்து 600 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் அண்டை நாடான லிபியாவை டேனியல் என்ற புயல் தாக்கியது. மத்திய தரைக்கடலில் உருவான இந்த புயல் லிபியாவின் கிழக்கு பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக டெர்னா, சூசா, பாய்தா, மார்ஜ் உள்பட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்

இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்து சேதம அடைந்தன. எனவே பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.

எனினும் இந்த புயலால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பலியாகி உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

தேசிய துக்க தினம்

இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 6 ஆயிரம் பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே புயலால் பலியானவர்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஒசாமா ஹமாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே உள்நாட்டு கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டு வரும் லிபியாவில் தற்போது இந்த புயலால் ஏற்பட்ட சேதம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.