மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக அணை பாதுகாப்பு பிரிவினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ‘ஆர்ச்’ வடிவிலும் செருதோணி அணை நேர் வடிவிலும் அருகருகே கட்டப்பட்டு தண்ணீர் ஒன்றாக தேங்கும். செருதோணி அணையில் மட்டும் ஷட்டர்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது. எனினும் ஜூலை 22ல் மதியம் 3:15 மணிக்கு செருதோணி அணையில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ‘ஹைமாக்ஸ்’ லைட் டைமர், எர்த் வயர் ஆகியற்றை இணைத்து பூட்டுகளைக் கொண்டு பூட்டியதுடன் ஷட்டரை திறக்க பயன்படுத்தப்படும் இரும்பு வடத்தில் ஒரு வித திரவத்தை ஊற்றினார். அச்சம்பவம் ஒன்றரை மாதத்திற்கு பிறகு கடந்த வாரம் தெரியவந்தது.
சிக்கல் அணையில் அத்துமீறி நுழைந்தவர் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தபோதும் அவர் சம்பவத்திற்கு பின் வெளிநாடு சென்றதால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை வெளிநாட்டில் இருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
செருதோணி அணையில் ஷட்டர்களை திறக்க பயன்படுத்தும் இரும்பு வடத்தில் ஒருவித திரவத்தை ஊற்றியதால் ஷட்டர்களை திறந்து ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது ஷட்டருக்கு கீழ் நீர்மட்டம் உள்ளதால் அவற்றை திறப்பதில் சிக்கல் ஏற்படவில்லை.
அணை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் செருதோணி அணையில் உள்ள ஐந்து ஷட்டர்களை திறந்து ஆய்வு நடத்தினர். இடுக்கி, செருதோணி அணைகளில் அங்குலம் அங்குலமாக நடத்திய ஆய்வில் அசம்பாவிதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதனால் அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக உதவி தலைமை பொறியாளர் பிஜூ தெரிவித்தார்.
என்ன காரணம்
அணையில் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு போலீசாரின் பற்றாக்குறை காரணம் என தெரியவந்தது. செருதோணி அணை பகுதியில் எட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் எண்ணிக்கையை 2019க்கு பிறகு எவ்வித காரணமும் இன்றி குறைத்தனர். தற்போது செருதோணி அணை நுழைவு பகுதியில் இரண்டு போலீசார் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement