ஓவல்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் விளாசிய 182 ரன் கைகொடுக்க, 181 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, மெகா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு பவுல்ட் தொல்லை தந்தார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் (0) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய இவரது ‘வேகத்தில்’ ஜோ ரூட் (4) வெளியேறினார். பின் இணைந்த டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது.
மாலன் அரைசதம் கடந்தார். சிக்சர் மழை பொழிந்த ஸ்டோக்ஸ், 76 பந்தில் சதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 199 ரன் சேர்த்த போது பவுல்ட் பந்தில் மாலன் (96 ரன், ஒரு சிக்சர், 12 பவுண்டரி) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
கேப்டன் பட்லர் (38), லிவிங்ஸ்டன் (11), மொயீன் அலி (12) சோபிக்கவில்லை. மறுமுனையில் அசத்திய ஸ்டோக்ஸ், பிலிப்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி 150 ரன்னை கடந்தார். அபாரமாக ஆடிய இவர், 182 ரன்னில் (9 சிக்சர், 15 பவுண்டரி) ஆட்டமிழந்தார். மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 5 விக்கெட் சாய்த்தார்.
கடின இலக்கு:
பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தபடி இருந்தது. துவக்க வீரர்கள், கான்வே(9), வில் யங்(12) ஏமாற்றினர். நிக்கோலஸ்(4), கேப்டன் லாதம்(3) நிலைக்கவில்லை. கிளன் பிலிப்ஸ் 72 ரன் விளாசி அவுட் ஆனார்.
மற்ற வீரர்கள் சொதப்ப, 187 ரன்னுக்கு நியூசி., அணி, ‛ஆல் அவுட்’ ஆனது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன், வோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 181 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்குக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில், நியூசி வெற்றி பெற்றால், தொடரை சமன் செய்யலாம். மாறாக இங்கிலாந்து வெற்றி பெற்றால், தொடரை 3-1 என கைபற்றி, கோப்பையை வெல்லும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்