ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான மாண்புமிகு ஹிமாலி அருணதிலக்க அவர்களின் அறிக்கை
2023 செப்டம்பர் 13
தலைவர் அவர்களே,
இந்த சபை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியானது உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை, ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொள்கைகளால் வழிநடத்தப்படல் வேண்டும் என்பதே தீர்மானங்கள் 60/251 மற்றும் 48/141 இன் தேவைப்பாடாகும்.
துரதிஷ்டவசமாக, இலங்கையைப் பொறுத்தமட்டில் அது அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.
எழுத்துபூர்வமான அறிக்கையின் ஒரு விடயமாக, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த குறிப்பு இடம்பெற்றிருந்தது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தமது பகுப்பாய்வில் பக்கச்சார்பான ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பயன்படுத்த முற்பட்டமை வருத்தமளிக்கிறது. இந்தச் சபைக்கு இலங்கை பலமுறை அறிவித்துள்ளபடி, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உட்பட பல விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. மற்றும் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச தொழில்முறை நிறுவனங்கள் உதவிகளை வழங்கின.
ஏப்ரல் 2023 நிலவரப்படி, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களில் 79 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களின் போது ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை இலங்கை உயர் நீதிமன்றம் 2023 ஜனவரி 12ஆந் திகதி வழங்கியது.
மேலும், பொதுக் களத்தில் எழுந்துள்ள கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
தலைவர் அவர்களே,
இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது, எமது நாட்டில் காணக்கூடிய முன்னேற்றத்தை அங்கீகரித்து, பல நாடுகள் தெரிவித்த நேர்மறையான கருத்துக்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
தலைவர் அவர்களே,
ஒரே சீனா கொள்கையை இலங்கை ஆதரிப்பதுடன், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான சீனாவின் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கின்றோம். இறையாண்மையுள்ள எந்தவொரு நாட்டின் உள்ளக விவகாரங்களிலும் தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது மற்றும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
நன்றி.