பெங்களூரு, கர்நாடகாவில், தன் ஸ்கூட்டர் மீது வைக்கப்பட்ட 94 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற வாலிபரை, 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கைது செய்த போலீசார், பணத்தையும் மீட்டனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பிரமோத், 45; கால் சென்டர் நிறுவனம் நடத்துகிறார்.
வீட்டுமனை வாங்க நினைத்தவர், சில நாட்களுக்கு முன் வங்கிக்கு சென்று, தன் கணக்கிலிருந்து 94 லட்சம் ரூபாய் எடுத்தார்.
அட்டை பெட்டி
கடந்த 6ம் தேதி அட்டை பெட்டியில், 94 லட்சம் ரூபாயை வைத்து, காரில் நண்பரின் கடைக்கு சென்றார். அங்கு வைத்து பிரமோத்தும், அவரது நண்பரும் பணத்தை எண்ணினர். இதன்பின், பணம் இருந்த அட்டை பெட்டி மற்றும் சில ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு, பிரமோத் காருக்கு சென்றார்.
காரின் அருகே நின்ற ஸ்கூட்டர் மீது, பணம் இருந்த அட்டை பெட்டியை வைத்தார். பின், நண்பரின் கடைக்குள் சென்று விட்டு திரும்ப வந்தார். ஸ்கூட்டர் மீது வைத்திருந்த பணம் இருந்த அட்டை பெட்டியை மறந்துவிட்டு, காரை எடுத்துச் சென்றார்.
சிறிது துாரம் சென்றதும், அட்டை பெட்டி பற்றி அவருக்கு நினைவு வந்தது. காரை திருப்பி, நண்பரது கடைக்கு வந்தார்.
அதற்குள் ஸ்கூட்டரையும், ஸ்கூட்டரில் வைத்திருந்த பண பெட்டியையும் காணவில்லை. போலீசில் புகார் செய்தார்.
கண்காணிப்பு கேமரா
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, பணம் இருந்த அட்டை பெட்டியுடன், ஒரு வாலிபர் ஸ்கூட்டரில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இறுதியில், ஸ்ரீநகர் கல்லப்பா பிளாக்கில் வசிக்கும் வருண் 33 என்பவர், பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் இருந்து, 93.95 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
விசாரணையில், தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் ஊழியராக வருண் வேலை செய்தது தெரிந்தது.
திருடி வந்த, 94 லட்சம் ரூபாயில், 5,000 ரூபாயை செலவு செய்துஉள்ளார்.
பணத்தை எடுத்து வந்ததும், எப்படி செலவு செய்வது என யோசித்தவர், ‘இன்னோவா’ கார் வாங்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்